சப்ஜெயிலில் இருக்கும் பட்டாசு ஆலை மேலாளர் ஒருவரைச் சிறப்புக் கவனிப்பு மேற்கொள்ள நடத்தப்பட்ட பேரத்தொகையின் ஆடியோ வைரலானதால் சப்ஜெயில் வார்டன் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டத்தின் திருவேங்கடம் அருகிலுள்ள ஸ்ரீரெங்கபுரம் கிராமத்தில் செயல்பட்ட பட்டாசு ஆலையில் கடந்த பிப்ரவரியில் தீ விபத்து ஏற்பட்டதில் இருவர் மரணமடைந்தனர். இது தொடர்பாக திருவேங்கடம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பட்டாசு ஆலையின் மேலாளர் கைது செய்யப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டு சங்கரன்கோவிலிலுள்ள சப்ஜெயிலில் சிறை வைக்கப்பட்டார்.
அவரை சிறையில் நன்றாகக் கவனித்துக் கொள்வதற்காக ஆலை சார்பில் கண்காணிப்பாளருக்குச் சிறப்புத் தொகை கொடுத்து வந்ததாகப் பேச்சு அடிபட்டது.
இதனிடையே சப்ஜெயில் பேரம் தொடர்பாக ஆடியோ ஒன்று வெளியாகி வாட்ஸ் அப் உலகைக் கலக்கியது.
அந்த ஆடியோவில் சிறை வார்டன் வைரமணி உள்ளிட்ட இரண்டு சிறை அதிகாரிகள் ஆலை நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அதில் மேலாளரைச் சிறையில் நல்லா கவனிக்கனும்னு இத்தனை ஆயிரம் கொடுத்திருக்கீக. என்னைக் கேக்காம ஏன் குடுத்தீக. ஆனா பணத்தை வாங்குன அவர் எங்களுக்கும் தரலை. கைதிக்கு ஒரு டீ கூடக் குடுக்கல்ல. இனிமே பணம் குடுக்கிறதாயிருந்தா என்ன கேக்காமக் குடுக்க வேண்டாம். என்று ஒரு வார்டன் பேச, அடுத்து வைரமணி என்ற வார்டனோ நா சொன்னேன்ல. நாளை காலை ஒம்பதரை மணிக்கு ரயில்வே ஸ்டேஷன்ல இருப்பேன் வாங்க. தன்னைத் தனியாகக் கவனிக்க வேண்டும் என்றும் பேசியுள்ளாராம்.
இந்த ஆடியோ பதிவு சிறை அதிகாரிகளின் கவனத்திற்குப் போனதுடன் வைரலாகவும் பரவியது. இதையடுத்து வைரமணி பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தப் பரபரப்பான ஆடியோ மூலம் சங்கரன்கோவில் சப்ஜெயிலில் கைதிகளுக்குச் சலுகை என்றால் கவனிப்பு என்ற நிர்வாகத்தின் ஃபார்முலா அம்பலமேறியுள்ளது.