தாயார் மறைவிற்கு ஆறுதல் கூறியவர்களின் வார்த்தைகள் மிகப் பெரிய உந்து சக்தியாக விளங்குவதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாயார் பழனியம்மாள்(95) உடல்நலக்குறைவு காரணமாக பிப்ரவரி 24 ஆம் தேதி காலமானார். வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக தேனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பல்வேறு தரப்பிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தன் தாயின் இறப்பின் போது ஆறுதல் தெரிவித்தவர்களுக்கு நன்றி கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது, “என்னை ஈன்றெடுத்த அருமைத் தாய் திருமதி ஓ. பழனியம்மாள் வயது மூப்பின் காரணமாக 24-02-2023 அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி அறிந்து வேதனையில் இருந்த தருணத்தில் நேரிலும், தொலைபேசி மூலமும், சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாகவும் ஆறுதல் தெரிவித்த தமிழ்நாடு ஆளுநர், தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநர், ஜார்கண்ட மாநில ஆளுநர், தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள், பிற கட்சித் தலைவர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், என் உயிரினும் மேலான எனதருமை தொண்டர்கள், திரைப்படத் துறையைச் சார்ந்தவர்கள், பத்திரிகைத் துறையைச் சார்ந்தவர்கள், ஊடகவியல் நண்பர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை நண்பர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது சார்பிலும் எனது குடும்பத்தினர் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது தாயின் மறைவு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருந்தாலும் எல்லாம் வல்ல இறைவனின் அருளும் அனைவரின் ஆறுதல் வார்த்தைகளும் எனக்கு மிகப் பெரிய உந்து சக்தியாக விளங்குகின்றன. ‘எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்’ என்ற ஜெயலலிதாவின் இலட்சியப் பாதையில் எனது மக்கள் தொண்டும் கழகப் பணிகளும் தொடரும்” எனக் கூறியுள்ளார்.