Skip to main content

“பாஜக தற்போது எதிரி, ஆனால் 15 மாதங்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்” - சீனிவாசன்

Published on 08/10/2024 | Edited on 08/10/2024
 Srinivasan said BJP is the enemy now, but anything can happen in 15 months

தமிழக அரசு உயர்த்தி உள்ள சொத்து வரியை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி திண்டுக்கல்  மாநகராட்சி அலுவலகம் அருகே அதிமுக சார்பில்  மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர்  சீனிவாசன் தலைமை தாங்கினார். இதில் பெரியார் சிலை முதல்  மணிக்கூண்டு வரை மனிதச் சங்கிலி போராட்டத்தில் மாவட்டம், நகரம் ஒன்றியம் பொறுப்பாளர்களுடன் பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அதன்பின் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பேசும் போது, “திண்டுக்கல்லில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதற்கு த திண்டுக்கல் சாட்சி. காட்சி மாறுவதற்கு ஆட்சி மாறவேண்டும். அண்ணா தொடங்கிய கட்சியை ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும். கலைஞர் முதலமைச்சராக இருக்கும்பொழுது ஸ்டாலின் துணை முதல்வராக ஆக்கப்பட்டார். அதேபோல் ஸ்டாலின் தனது மகனைத் துணை முதல்வராக ஆக்கியுள்ளார். அதன்பின்பு இன்பநிதி துணை முதலமைச்சராக ஆக்கப்படுவார் என நினைக்கிறோம்.  உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா? நடக்காதா? என்பதை ஆளுங்கட்சி தான் முடிவு செய்ய வேண்டும். எப்போது தேர்தல் வந்தாலும் அதைச் சந்திக்க அதிமுக தயாராக உள்ளது. கொடுங்கோல் ஆட்சி நடைபெறுகிறது. தேவையில்லாத ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்கக் கூடாது.

 Srinivasan said BJP is the enemy now, but anything can happen in 15 months

விஜய் கட்சி ஆரம்பிப்பதை வரவேற்கிறோம். மாநாட்டைத் தொடர்ந்து அவர் என்ன செய்ய உள்ளார் என்பதை இனி தான் பார்க்க வேண்டும். தற்போது எந்த விமர்சனமும் விஜய்க்கு எதிராக கிடை யாது. 2026 தேர்தலை சந்திக்க பதினாறு அமாவாசை இருக்கிறது. 10 அமாவாசை முடிந்தவுடன் திமுக கூட்டணியில் உள்ள அனைவரும் எடப்பாடி பழனிசாமியுடன் சேர்ந்து கொள்வார்கள். மக்களும் அதிமுகவிற்கு ஓட்டு போடுவதற்குத் தயாராக உள்ளனர். அனைத்து கட்சியும் கூட்டணியுடன் தான் போட்டியிடுகிறது. கட்சிகள் அனைத்தும் கூட்டணி இல்லாமல் இருக்க முடியாது. கூட்டணி இல்லாமல் தனித்து நிற்க நாங்கள் தயார் ஆனால் கூட்டணி அமையும் பட்சத்தில் அதனை உதாசீனப்படுத்த முடியாது. கூட்டணி வந்தால் ஏற்றுக் கொள்வதுதான் ஜனநாயக கடமை. அனைவரும் சேர்ந்தால் தான் ஓசை எழுப்ப முடியும்.

பாஜக உடனான கூட்டணி குறித்த கேள்விக்கு, ஜோசியம் சொல்ல முடியாது, சூழ்நிலையை பொறுத்துத்தான், தேர்தல்  வரும் பொழுது அது குறித்து தெரிய வரும். அரசியலில் நிரந்தர எதிரி இல்லை. நிரந்தர நண்பரும் இல்லை. எது வேண்டுமானாலும் நடக்கலாம். இப்பொழுது பா.ஜ.க-விற்கு நாங்கள் எதிரி. 15 மாதங்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். 2026ம் தேர்தலை பொறுத்தவரை அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திப்போம் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்” என்று கூறினார்.

இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி, நிலக்கோட்டை, ஆத்தூர்,  நத்தம் உள்பட சில பகுதிகளிலும் ஆளுங்கட்சிக்கு எதிராக மனிதச் சங்கிலி போராட்டத்தை எதிர்க்கட்சியான அதிமுக நடத்தியிருக்கிறது.

சார்ந்த செய்திகள்