Skip to main content

செப்டம்பர் 17இல் ‘சமூகநீதி நாள் உறுதிமொழி’ ஏற்பு நிகழ்ச்சி - திமுக அறிவிப்பு!

Published on 15/09/2024 | Edited on 15/09/2024
'Social Justice Day Pledge Acceptance Program on September 17 DMK Announcement

தந்தை பெரியார் பிறந்தநாளை (செப்டம்பர் 17) முன்னிட்டு திமுக சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் ‘சமூகநீதி நாள் உறுதிமொழி’ நாளை மறுநாள் (17.09.2024) ஏற்கப்பட உள்ளதாக திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து திமுக தலைமைக் கழகத்தின் சார்பில் இன்று (15.09.2024) வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “தந்தை பெரியாரின் ஒவ்வொரு பிறந்த நாளும் ‘சமூகநீதி நாளாக’ கடைப்பிடிக்கப்படும் என்றும்; அப்பிறந்தநாள் அன்று ‘சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்க வேண்டும்’ எனத் தமிழ்நாடு முதலமைச்சரும்,  திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த 6.9.2021 அன்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.

இந்த ஆணைக்கிணங்க, தந்தை பெரியார் பிறந்த நாளான 17.9.2024 அன்று காலை 10.30 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அறிஞர் அண்ணா, கலைஞர் சிலை முன்பு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தலைமையில்‘சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு’ நிகழ்ச்சி நடைபெறும். இதில் சென்னையைச் சேர்ந்த அணைத்து மாவட்டக் கழகச் செயலாளர்களும் கலந்து கொள்கின்றனர். இந்நிகழ்ச்சியில் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் மற்றும் திமுக தொண்டர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தந்தை பெரியார் பிறந்த நாள் சமூக நீதி நாள் உறுதிமொழியில், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும் - யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியும் எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைப்பிடிப்பேன். சுயமரியாதை ஆளுமைத்திறனும் பகுத்தறிவுக் கூர்மைப் பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும். சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன். மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது இரத்த ஓட்டமாக அமையும். சமூகநீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்