தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ''கடந்த அதிமுக ஆட்சியில் இவர்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய அதிமுகதானே பிஹெச்சிஎல் நிறுவனத்தையும், பிஜிஆர் நிறுவனத்தையும் டெண்டரில் பங்குபெறச் செய்தது. இவர்கள்தானே டெண்டர் விட்டது. கடந்த அதிமுக ஆட்சியிலேயே அந்த டெண்டரை ரத்து செய்து இருக்கலாமே. எடப்பாடி பழனிசாமியிடமும் தங்கமணியிடமும் கேட்க வேண்டிய கேள்வியை பாஜக மாநிலத் தலைவர் பத்து மாதம் கழித்து இப்போது முன் வச்சிருக்காரு. உள்ளபடியே சொல்ல வேண்டுமென்றால் கடந்த அதிமுக ஆட்சியில் பாஜகவின் ஆதரவோடு நடந்த தவறுகளை இப்போது வெளிச்சத்துக்கு கொண்டு வருவதற்கான ஒரு நடவடிக்கையாகப் பார்க்கிறோம்.
பக்கத்தில் இருக்கக்கூடிய மாநிலங்கள் எல்லாம் முறையாக மின்சாரம் வழங்க முடியாத நிலையில் இருக்கின்றன. மின்வெட்டு ஏற்பட்டன. ஆனால் தமிழகத்தில் ஒரு நொடிப் பொழுது கூட மின்வெட்டு இல்லாத அளவிற்கு சீரான மின் விநியோகம் முதல்வரின் வழிகாட்டுதல்படி தொடர்ந்து நடக்கிறது. நிலக்கரி பற்றாக்குறை இருக்கும் காலகட்டங்களில்கூட ஒவ்வொரு நாளும் முதல்வர் கண்காணித்து சீரான மின் விநியோகம் வழங்குவதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து அதன் அடிப்படையில் மின்சாரம் சீராக வழங்கப்பட்டன.
சில பேருக்கு சில ஆசைகள் இருக்கும். ஒரு அவப்பெயர் ஆட்சிக்கு வந்துவிடாதா என்ற அந்த ஆசைகள். குறிப்பாக பிஜேபி மாநில தலைவருக்கு நான் சொல்ல வேண்டியது, நீங்கள் காண்பது கானல் நீர்'' என்றார்.
'பிஜிஆர் போன்ற தரமற்ற நிறுவனங்களுக்கு டெண்டர் கொடுக்கிறார்கள். இதுதான் திமுகவின் டெவெலப்மென்ட் மாடல் என பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளாரே' என்ற கேள்விக்கு,
''இந்த டெண்டர் மே மாதத்திற்குப் பிறகு விடப்பட்ட ஒப்பந்த புள்ளிகள் அல்ல. இது 2019ஆம் ஆண்டு கடந்த அதிமுக ஆட்சியில், இவர்கள் தூக்கிப்பிடித்த ஆட்சியில் விடப்பட்ட டெண்டர். அந்தக் காலகட்டங்களில் தரமான நிறுவனமா, தரமற்ற நிறுவனமா என இறுதி செய்வது யாருடைய பொறுப்பு. சில பேருடைய கனவு, சினிமாக்களில் வருவதுபோல் ஒரு பாட்டு முடிந்தவுடன் உயர்ந்த நிலையை அடைந்து விடலாம் என நினைக்கிறார்கள். அந்த சினிமா இதுவல்ல'' என்றார்.