விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் பிரச்சாரத்தின் போது பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இந்த கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து பேசி வந்தனர். இந்த நிலையில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தனக்கும், பிரபாகரனுக்கும் இடையேயான பழைய நினைவுகளை கூறியுள்ளார்.
அப்போது பிரபாகரன் தனக்கு போட்டு அண்ணன் வீட்டில் விருந்து கொடுத்ததைப் பற்றி பகிர்ந்து கொண்டார். மேலும் பிரபாகரன், காட்டில் உள்ள ஒரு வீட்டிற்குள் அழைத்துச்சென்று விதவிதமான உணவுகளை விருந்தளித்து தனக்கு ருசிக்க தந்ததாகவும் சீமான் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இதைதொடர்ந்து ராஜீவ்காந்தியையும், திமுகவையும் கடுமையாக விமர்சித்து பேசிய சீமான், தேர்தலில் நின்று ஜெயித்து தமிழக முதல்வராக வேண்டும் என்பதற்காக எல்லாம் நான் கட்சி தொடங்கவில்லை என்றும் இப்படி பேசுவதற்காகவே தான் கட்சி தொடங்கியதாகவும் தெரிவித்தார். ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் சீமான் ஆமைக்கறி சாப்பிட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது பொட்டு அண்ணன் வீட்டில் பிரபாகரன் விருந்து கொடுத்தார் என்று பேசியது அரசியல் கட்சியினரிடையே விவாதத்தை கிளப்பியுள்ளது.