Skip to main content

பெண்கள் தன்மானத்தோடு வாழ உதவுவதுதான் ‘புதுமைப் பெண் திட்டம்’ - சீமான்

Published on 17/02/2023 | Edited on 17/02/2023

 

Seeman on the pudhumai pen thittam

 

பெண்கள் தன்மானத்தோடு வாழ உதவுவதுதான் ‘புதுமைப் பெண் திட்டம்’ என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்பு கடந்த மாதம் 18 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இடைத்தேர்தலில் வெற்றிபெறும் நோக்கில் முதன்மைக் கட்சிகள் தங்கள் வேட்பாளரை அறிவித்து சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் சுயேச்சை வேட்பாளர்களும் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.

 

காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவனுக்காக காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளான திமுக, விசிக போன்றவை களத்தில் இறங்கி தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறது. அதேபோல் அதிமுக வேட்பாளர் தென்னரசுவிற்கு ஆதரவாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் அதிமுக கூட்டணிக் கட்சிகளான தமாகா, பாஜக போன்ற கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

 

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரான மேனகாவை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார். பரப்புரையில் பேசிய அவர், “புதுமைப் பெண் திட்டம், பாரதி பாடிய புதுமை; முன்னோர்கள் பாடிய புதுமை எல்லாம் வேறு. இது ஒரு கொடுமை. 1000 ரூபாய்க்கு மாணவிகளை கையேந்த வைப்பது அல்ல புதுமைப் பெண். அவளுக்கு ஆகச் சிறந்த கல்வி; ஆகச் சிறந்த வேலை; அந்த வேலைக்கேற்ற ஊதியம்; அதைக் கொண்டு தன் உறவினர்கள் யாரையும் சாராமல் தன் காலில் நின்று தன் மானத்தோடு வாழுகிற வாழ்க்கை அதுதான் புதுமைப் பெண். அப்படி ஒரு திட்டத்தை இவர்கள் செய்யமாட்டார்கள். இவர்கள் ஆணுக்கு பெண் சமம் என்கிறார்கள். ஆணும் பெண்ணும் சமம் என்பது நாங்கள் கற்றது. 76 வேட்பாளர்களில் ஒரே ஒரு பெண் வேட்பாளராக மேனகா போட்டியிடுகிறார்” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்