கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் இன்று (மே 28-ம் தேதி) சவார்க்கர் பிறந்தநாளன்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறப்பிற்காக நேற்று தமிழகத்திலிருந்து சென்ற ஆதீனங்களிடம் பிரதமர் மோடி ஆசி பெற்றதோடு செங்கோலையும் பெற்றுக் கொண்டார்.
அதன்படி இன்று புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டது. தொடர்ந்து செங்கோலும் நாடாளுமன்ற வைக்கப்பட்டது. அதேநேரம் பாஜக எம்.பி பாலியல் தொல்லை அளித்ததாக மல்யுத்த வீரர்,வீராங்கனைகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அவர்கள் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். அப்பொழுது போலீசார் அவர்களை குண்டுகட்டாக தடுத்து கைது செய்தனர்.
இதற்கு காங்கிரசின் ராகுல்காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்தநிலையில் தமிழக முதல்வர் 'செங்கோல் முதல் நாளே வளைந்து விட்டது' என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது, ''டெல்லியில் போராட்டம் நடத்திய மல்யுத்த வீராங்கனைகளை கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. பாஜக எம்பி மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் கூறி பல மாதங்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை. செங்கோல் முதல் நாளே வளைந்து விட்டது என்பதையே இச்சம்பவம் காண்பிக்கிறது'' என தெரிவித்துள்ளார்.