கடந்த 14 ஆம் தேதி தனது ரஃபேல் வாட்ச் ரசீதை வெளியிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தொடர்ந்து திமுக அமைச்சர்கள் குறித்த வீடியோ ஒன்றை காட்சிப்படுத்தினார். அந்த வீடியோவில் திமுகவைச் சேர்ந்த முக்கியமானவர்களின் சொத்து மதிப்புகள் குறித்த காட்சிகள் இருந்தன.
அண்ணாமலை தனது பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன் இந்த நோட்டீசை அனுப்பியுள்ளார். ஏற்கனவே செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை வெளியிட்டுள்ள ஊழல் பட்டியல் ஆதாரமற்றது. இதுகுறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இதற்கு முன்னர் BGR நிறுவனத்திற்கு முறைகேடாக திமுக வழங்கிய ஒப்பந்தத்தை வெளிக்கொண்டு வந்ததற்கு 500 கோடி ரூபாய் இழப்பீடு கோரி சட்ட அறிக்கை, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் துபாய் பயணம் குறித்து கேள்வி எழுப்பியதற்காக 100 கோடி இழப்பீடு கோரி சட்ட அறிக்கையைத் தொடர்ந்து மீண்டும் ஒரு முறை என் மீது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அவர்கள், 500 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு சட்ட அறிக்கை அனுப்பியுள்ளார். நேற்று முன்தினம் பத்திரிகையாளர்களைச் சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ஆருத்ரா நிதி நிறுவனத்திடம் 84 கோடி ரூபாய் நான் பெற்றுக்கொண்டதாக ஆதாரமற்ற பொய்க் குற்றச்சாட்டை என் மீது சுமத்தியுள்ளார்.
என் மீதும், பாரதிய ஜனதா கட்சியின் மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டை பொதுவெளியில் வைத்ததற்கு, ரூபாய் 500 கோடியே 1 ரூபாய் இழப்பீடாக கோருகிறேன். இதை நான் PM Cares நிதிக்கு செலுத்த விரும்புகிறேன். அடுத்த 48 மணி நேரத்தில், என் மீதும் எனது கட்சியின் மீதும் சுமத்தப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்காவிட்டால், ஆர்.எஸ்.பாரதி மீது தகுந்த வழக்கு தொடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், நீங்கள் அனுப்பிய சட்ட அறிக்கைக்கு பதிலும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்தமைக்கு இழப்பீடு கோரும் சட்ட அறிக்கையும் அனுப்பி வைக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.