Skip to main content

ஈரோடு கிழக்கில் வலுக்கும் எதிர்ப்பு; சீமானை கைது செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டம்

Published on 18/02/2023 | Edited on 18/02/2023

 

Resistance Strengthens in Erode East; Demonstration to arrest Seeman

 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் என கடந்த மாதம் 18 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத்தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் முதன்மைக் கட்சிகள் தங்கள் வேட்பாளரை அறிவித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், சுயேட்சை வேட்பாளர்களும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவனுக்காக கூட்டணிக் கட்சிகளான திமுக, விசிக போன்றவை களத்தில் இறங்கி தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றன. அதேபோல், அதிமுக வேட்பாளர் தென்னரசுவிற்கு ஆதரவாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டணிக் கட்சிகளான தமாகா, பாஜகவும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

 

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரான மேனகாவை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “சேர சோழ பாண்டியர்கள் இருக்கும் போது அவர்களுக்கு பட்டாடைகளை நெசவு செய்து கொடுத்த மக்கள். நெசவு மட்டும் செய்யவில்லை. போர்க் களத்தில் முதலில் களத்தில் பாய்ந்ததால் அவர்கள் முதலியார் என அழைக்கப்பட்டனர். விஜயநகர பேரரசு நிறுவப்பட்ட பின், அந்த மன்னர்கள் முதலியார்களை அழைத்து உங்கள் மன்னர்களுக்கு செய்து கொடுத்தது போல் எங்களுக்கு செய்து கொடுங்கள் எனச் சொன்னார்கள். ஆனால், அவர்கள் முடியாது எனச் சொல்லிவிட்டார்கள். வேறு வழியின்றி குஜராத்திலிருந்து சவுராஷ்டிராக்களை இறக்கினார்கள் இந்த விஜயநகர மன்னர்கள். மேலும், இந்த நிலத்தை தூய்மை செய்தது ஆதி தமிழ்க் குடிகள். அதேபோல், எங்கள் ஆட்சியிலும் நீங்கள் தூய்மைப்படுத்த வேண்டும் எனச் சொன்ன பொழுது, முடியாது எனத் தமிழர்கள் சொல்லிவிட்டார்கள். வேறு வழியில்லாமல் ஆந்திராவிலிருந்து ஆதிக் குடிகளை இறக்கினார்கள். அவர்கள் தான் இங்கு இருக்கும் அருந்ததியினர்” எனக் கூறினார்.

 

சீமானின் இந்தப் பேச்சு இணையத்திலும் ஈரோட்டு அரசியல் களத்திலும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சியினர் மற்றும் வேட்பாளர் நேற்று வாக்கு சேகரிக்கச் சென்றபோது ஈரோடு கிழக்கில் இருந்த சில மக்கள் நாம் தமிழர் கட்சியினருக்கு தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர். எங்களை அருந்ததியினர் எனக் கூறுகிறீர்கள். எங்கள் ஓட்டு மட்டும் செல்லுபடியாகுமா என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

இந்நிலையில் இன்றும் நாம் தமிழர் கட்சி மற்றும் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக ஈரோடு கிழக்கில் திருநகர் காலனி ராஜாஜி பகுதியில் உள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆந்திராவிலிருந்து வந்த எங்களிடம் ஏன் வாக்கு சேகரிக்க வருகிறீர்கள் எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சீமானை கைது செய்ய வேண்டும் என்றும் அவர் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதால் மக்கள் கலைந்து சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்