ராஜ்யசபா உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அன்வர்ராஜா விண்ணப்பம் செய்துள்ளார்.
அதில், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் இராமநாதபுரத்தில் போட்டியிடுவதற்கு எனக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று தாங்கள் பெரிதும் தீர்மானம் செய்திருந்தீர்கள். ஆனால் கடைசி நேரத்தில் அந்த தொகுதி கூட்டணி கட்சியான பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது.
இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை ஆகிய தென் மாவட்டங்களில் முக்குலத்தோர், முஸ்லீம்கள், தாழ்த்தப்பட்டவர்கள், யாதவர்கள் மற்றும் ஏனைய வகுப்பினர் அதிகமாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களில் முக்குலத்தோரில் அகமுடையார் வகுப்பைச் சேர்ந்த பொ.அன்பழகன், தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த கே.மலைச்சாமி, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த எம்.எல்.நிறைகுளத்தான், யாதவர் வகுப்பைச் சேர்ந்த எஸ்.கோகுலஇந்திரா ஆகியோர் ராஜ்யசபா உறுப்பினராகும் வாய்ப்புகள் கடந்த காலங்களில் வழங்கப்பட்டுள்ளன. இஸ்லாமியர்கள் மிக அதிகமாக வாழ்கின்ற இராமநாதபுரம் மாவட்டத்தில் ராஜ்யசபா உறுப்பினர் ஆகும் வாய்ப்பு நம்முடைய கட்சியில் இதுவரை யாருக்கும் வழங்கப்படவில்லை.
வரும் ஜூன் மாத இறுதியில் ராஜ்யசபா உறுப்பினருக்கான தேர்தல் நடைபெற இருப்பதை தாங்கள் அறிவீர்கள். எனவே, இந்த தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை எனக்கு வழங்கிட வேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். என்றென்றும் இயக்கத்திற்கும், முதலமைச்சருக்கும் விசுவாசமாய் இருந்து பணியாற்றுவேன் என்று உளமார உறுதி அளிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும், 1965ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் அரசியலில் ஈடுபட்டு, 2014 முதல் 2019 வரை இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றி வந்தது வரை தன் விவரக்குறிப்பை இணைத்துள்ளார்.