Skip to main content

ரஜினிக்கும் சீமானுக்குமான யுத்தம் தொடங்கிவிட்டதா?

Published on 09/06/2018 | Edited on 10/06/2018
s r

 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து ரஜினிகாந்தை கடுமையாக விமர்சித்து வருகிறார்.  இந்நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் தூத்துக்குடி போராட்டத்திலும் சமூக விரோதிகள், விஷக்கிருமிகள் ஊடுருவினார்கள். அவர்கள் யார் என்று எனக்குத்தெரியும் என ரஜினிகாந்த் பேசினார்.

 

ரஜினியின் இந்த பேச்சு சீமானையும், அவரது ஆதரவாளர்களையும் குறிப்பிட்டுத்தான் என்ற கருத்து நிலவுகிறது. இந்த சந்தர்ப்பத்தில் தனியார் தொலைக்காட்சி நேர்காணலில், ரஜினிக்கும் சீமானுக்குமான யுத்தம் தொடங்கிவிட்டதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.   அப்போது எதற்கெடுத்தாலும் போராடினால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும் என்ற ரஜினியின் கருத்து குறித்தும் கேள்வி எழுப்பட்டது.

 

 

 

அதற்கு பதிலளித்த சீமான்,  ‘’போராட்டங்கள் இல்லாமல் மாற்றங்களை பெற முடியாது.  இழந்துவிட்ட உரிமைகளை போராடித்தான் பெற வேண்டும்.  எதற்கெடுத்தாலும் போராட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுவிட்டோம்.  போராடவில்லை என்றால்தான் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும். 

 

ரஜினியை யாரும் அம்பலப்படுத்த வேண்டியதில்லை.  அவரை அவரே அம்பலப்படுத்திவிடுவார்.  ரஜினிதான் தமிழ்சமூகத்தின் விரோதி.  மண்ணை நேசிப்பவர்கள்  சமூக விரோதிகளாக சித்தரிக்கப்படுகின்றனர்.  மண்ணை அழிப்பவர்கள் தேசபக்தர்களாக சித்தரிக்கப்படுகின்றனர்.   விஷக்கிருமி என்ற வார்த்தைதான் விசமத்தனமாக உள்ளது.   

 

 

 

காலா படத்தில் போராடுகிறார். ஆனால் நிஜத்தில் போராட்டம் வேண்டாம் என்கிறார்.  திரையில் ஒன்று தரையில் ஒன்று பேசுவதில் ரஜினியின் நிஜமுகம் தெரிகிறது.  ரஜினியை எதிர்த்து நாம் பேசவேண்டியதில்லை.  அவருக்கு எதிராக அவரே பேசிவிடுவார்.

 

சமூக விரோதிகள் யாரும் மக்களில் கிடையாது.  சமூக விரோதிகள் எல்லோரும் அதிகாரத்தில் இருக்கிறார்கள்.

 

 ரஜினி அரசியல் களத்திற்கு வரட்டும்; சந்திக்கலாம்.  நான் ரஜினி அளவுக்கு புகழ் பெற்ற நடிகன் இல்லை.  என் படத்திற்கு ரசிகர்கள் யாரும் பாலாபிஷேகம் செய்வதில்லை.  நான் ரசிகர்களை சந்திப்பதில்லை.  மக்களைத்தான் சந்திக்கிறேன். அதிகாரத்திற்கு யார் வருவார் என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். இதற்கு மேலும் அவர்தான் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்றால் அதை ஒன்றும் செய்யமுடியாது ’’என்று தெரிவித்தார்.  

சார்ந்த செய்திகள்