மது வாங்க தடை இல்லை... மனு கொடுக்க மட்டும் தடையா? எனக் கேள்வி எழுப்பி முதலமைச்சர் வீட்டு முன்பு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனத் தலைவர் மூ. ராஜேஸ்வரி பிரியா.
.
''அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் சார்பாக முதல்வரைச் சந்தித்து மனு கொடுக்க முயற்சி செய்தோம். எந்த மனுவும் ஏற்றுக்கொள்ளப்படாது என்று தலைமைச் செயலகத்தில் தெரிவித்தார்கள். அதன் பின்னர் முதல்வர் இல்லத்தின் முன்பு நீண்ட நேரம் காத்திருந்து நேரில் மனுவைக் கொடுக்க வேண்டும் என்று காவல்துறையினரிடம் தெரிவித்தோம்.
முதலமைச்சரைச் சந்திக்க முடியாது எனச் சொன்னார்கள். பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையைக் காவல்துறையினர் நடத்தினர். சமரசம் செய்து கொள்ளாமல் முதல்வரைச் சந்திக்க வேண்டும் என்று காத்திருந்தோம். அவர்கள் கரோனா முடியும்வரை முதல்வர் யாரையும் சந்திக்க மாட்டார் என்றனர். ஊரடங்கு முடிவதற்கு முன்னர் மதுக் கடைகளை மட்டும் திறக்கலாமா? முதல்வரைச் சந்தித்து மனு கொடுக்க கூடாதா? மது வாங்க தடை இல்லை? மனு கொடுக்க மட்டும் தடையா? என்று கேள்விகளை எழுப்பினோம். நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு காவல்துறை அதிகாரி சுதர்சன் நேரில் வந்து, நாங்கள் கண்டிப்பாக மனுவை முதல்வரிடம் கொண்டு சேர்க்கிறோம் என்று உறுதியளித்து மனுவினை பெற்றுக்கொண்டதாக'' தெவிக்கிறார் ராஜேஸ்வரி பிரியா
.
முதல்வருக்கு அளித்த மனுவில், ''மக்கள் வேலைக்குச் செல்வதற்கு முன்பு டாஸ்மாக் கடைகளைத் திறப்பது பெரும் விளைவை ஏற்படுத்தும். கடந்த 45 நாட்களாக ஊரடங்கு உத்தரவிடப்பட்டு அனைத்து நிறுவனங்களும் அத்தியாவசியப் பொருட்கள் தவிர மற்றவை மூடப்பட்டிருந்ததை நாம் அறிவோம். அப்படிப் பாதுகாப்பாக இருந்த சமயத்திலும் நாளுக்கு நாள் கரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை நாம் பார்த்துக் கொண்டுள்ளோம்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் டாஸ்மாக் கடைகளைத் திறப்பது மிகப்பெரிய ஆபத்தை உண்டாக்கும். மக்கள் யாரும் வேலைக்குச் செல்ல வாய்ப்பில்லை. அதற்கான எந்த ஏற்பாட்டையும் அரசு இன்னும் செய்யவில்லை. உணவிற்கே வழியில்லாமல் பல குடும்பங்கள் தவிக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் குடிப்பவர்கள் எங்கிருந்து பணம் பெற்று மது வாங்குவார்கள். மனைவிமார்களின் தாலியைத் தவிர வேறு என்ன வழி, எத்தனையோ குடும்பங்கள் மது இல்லாமல் நிம்மதியாக இருந்தனர்.
குழந்தைகள் கூட ஒரு வேளை உணவு இருந்தால் போதும் அப்பா குடிக்காமல் இருக்கிறார் என்று மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். மது அவசியமா? அவசியமற்றதா? மதுவிலக்கு சாத்தியமா? என்பதைப் பற்றி விவாதிக்க நான் தற்போது வரவில்லை.
வருமானமில்லை மதுக்கடை ஏன்? இத்தனை நாட்களாக அயராது உழைத்துவரும் மருத்துவர்களுக்கும், காவலர்களுக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும் அரசு செய்யும் மரியாதையா இது? காய்கறி விற்பனை மூலம் பரவிய கரோனா மதுக்கடை வாடிக்கையாளர் மூலம் பரவ மாட்டேன் என சத்தியம் செய்து கொடுத்துள்ளது? இப்படிப்பட்ட சூழலில் மதுக்கடைகளைத் திறவாமல் மக்களின் நலன் கருதி மக்களை கரோனாவில் இருந்து காப்பாற்றுவதற்காக அரசு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும்'' எனக் கோரிக்கை வைத்துள்ளார் ராஜேஸ்வரி ப்ரியா.