அதிமுக பொதுக்குழுவை உடனே கூட்ட வேண்டும் என்று மதுரை வடக்கு அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறியிருக்கிறார். மேலும் அவர் பேசும்போது, கட்சியில் அதிகாரம் படைத்த ஒருவர் அதிமுகவுக்கு தலைமை ஏற்க வேண்டும். ஏனென்றால் தேர்தல் முடிவுகள் வெளியாகி வெற்றி பெற்றவர்கள் யாரும் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்த போகவில்லை. தேனி எம்பி மட்டும் தனியாக சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார். இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 9 எம்எல்ஏக்கள் செல்லவில்லை. போகாமல் இருப்பதற்கு காரணம் யார்?
திமுக என்ன முயற்சி செய்தாலும், அதிமுக எம்எல்ஏக்கள் திமுக பக்கம் போகமாட்டார்கள். டிடிவி தினகரன் என்ற மாயை இப்போது இல்லை. இரண்டு பேர் இருப்பதால் உடனடியாக சில முடிவுகளை எடுக்க முடியவில்லை ஆகையால் அதிமுகவுக்கு ஒரே தலைமை வர வேண்டும் பொதுச்செயலாளர் யார் என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார். இவரது பேட்டி அதிமுக வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், ராஜன் செல்லப்பா கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், அ.தி.மு.க.வில் கோஷ்டி பூசல் என்பது தவறான தகவல். அ.தி.மு.க. பலம் பொருந்திய கட்சியாக உள்ளது. அ.ம.மு.க.விற்கு சென்றவர்கள் அ.தி.மு.க.விற்கு திரும்பி வருகின்றனர். தொண்டர்களால் ஆளப்படும் கட்சி அ.தி.மு.க. வலிமைமிக்க இயக்கம் அ.தி.மு.க. இந்த இயக்கம் பல்வேறு திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தி வருகிறது. ராஜன் செல்லப்பா பேசியது குறித்த முழு விவரங்களை பார்த்த பிறகே பதிலளிக்க முடியும் என கூறினார். பேட்டியை முழுமையாக பார்க்கவில்லை என்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.