
வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய அதிக ஆர்வம் காட்டுவது ஏன் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த கருத்தரங்கு ஒன்றில், பட்டியல் இனத்தவர்கள் குறித்து கருத்து தெரிவித்ததாகக் கூறி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதிக்கு எதிராக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டதை அடுத்து, கடந்த மாதம் ஆர்.எஸ். பாரதி இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி, இந்த வழக்கில் ஜூன் 1-ம் தேதி சரணடைந்த ஆர்.எஸ். பாரதிக்கு ஜாமீன் வழங்கி சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த ஜாமீனை ரத்து செய்யக்கோரி மத்திய குற்றப் பிரிவு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், கடும் நிபந்தனைகள் ஏதும் விதிக்காமல் ஆர்.எஸ். பாரதிக்கு அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. தொற்று நோய் பரவலைக் காரணம் காட்டி ஜாமீன் வழங்க முடியாது. கொரோனா வைரஸ் காரணமாக, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்ததாக ஆர்.எஸ்.பாரதி கூறுவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில அரசு கவனிக்க வேண்டிய ஏராளமான விஷயங்கள் உள்ள நிலையில், ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்வதற்கு அதிக அக்கறை காட்டுவது ஏன்? எனக் கேள்வி எழுப்பி, விசாரணையை ஜூன்19-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.