விவசாயிகளுக்காக 24 மணி நேரமும் மின்சாரம் வழங்க வேண்டும் என்ற எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியின் கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுக ஆட்சிக் காலத்தில் நடந்ததை மேற்கோள் காட்டி பதில் அளித்துள்ளார்.
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது குறித்த விவகாரத்தில் ஏதேனும் செய்திகள் வந்தால் அதை என்னிடமோ அல்லது மின்சாரத்துறை உயரதிகாரிகளிடமோ உறுதி செய்து கொண்டு அதை செய்தியாக வெளியிட வேண்டும் என ஊடகத்துறையினருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கோரிக்கை விடுத்துள்ளார்.
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் மிக சிறப்பாக முடிக்கப்பட்டுள்ளன. 67 ஆயிரம் பேர் மட்டுமே இன்னும் இணைக்கவில்லை. ஒரு குடியிருப்பில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால், அதை ஒரு இணைப்பாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று திருவெறும்பூரில் அதிகாரி ஒருவர் சுற்றறிக்கை அனுப்பி அது ஒரு செய்தியாக ஆக்கப்பட்டது.
உடனடியாக மின்சார வாரியத்தின் அதிகாரிகள் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதனால் இதுபோன்ற செய்திகள் ஏதேனும் வந்தால் ஊடகத்துறையினர் என்னிடமோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமோ கேட்டு தெளிவுபடுத்திக் கொண்டு அதை செய்தியாக வெளியிடவும். ஏனெனில், செய்தியாக அவ்விவகாரம் வந்தால் பொதுமக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தி பரபரப்பாகிறது. இதுபோன்ற சுற்றறிக்கை யாருக்கும் அனுப்பப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரி அவராக சுற்றறிக்கை அனுப்பியதால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு மின்சார வாரியத்தை பொறுத்தவரை ஏற்கனவே பெறப்பட்ட மின் இணைப்புகளில் எவ்விதமான மாற்றமும் செய்யப்படாது. எத்தனை மின் இணைப்புகளை பெற்று இருந்தாலும் அவர்களுக்கு 100 யூனிட் மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். ஏற்கனவே மின் இணைப்புடன் ஆதார் இணைப்புப் பணிகள் துவங்கிய பொழுது நாங்கள் என்ன தகவல்களை சொன்னோமோ அதே நடைமுறையைத்தான் மின்சார வாரியம் பின்பற்றுகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி 24 மணி நேரம் மின்சாரத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளார். 2021 பிப்ரவரி 26 ஆம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி 25 ஆம் தேதி ஒரு அரசாணையை அதிமுக வெளியிட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட அந்த அரசாணையில் மிகத் தெளிவாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. டெல்டா பகுதிகளில் 12 மணி நேரமும் மற்ற பகுதிகளில் 9 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. டெல்டா பகுதிகளுக்கு 12 மணி நேரமும் மற்ற பகுதிகளுக்கு 9 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது அந்த அரசாணையில் தெளிவு படுத்தப்பட்டுள்ளது” எனக் கூறினார்.