விவசாயிகளுக்கு எதிரான ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட விவசாயத்தை சீரழிக்கும் திட்டத்தை தடை செய்ய தொடர்ந்து பாடுபடுவேன் என்பதையே பிரதான கோரிக்கையாக வைத்து பிரச்சாரம் செய்து வருகிறார் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளர் செ. ராமலிங்கம்.
கடந்த ஒருவார காலமாக திமுக வேட்பாளர் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று நாகை மாவட்டம், செம்பனார்கோயில் பகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அங்குள்ள கஞ்சாநகரம், மேலப்பாதி, கீழையூர், பொன்செய், கிடாரங்கொண்டான், தலைச்சங்காடு, கருவி, சின்னங்குடி, வடகரை, பெரம்பூர், காட்டுச்சேரி, டி. மணல்மேடு உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட விவசாய கிராமங்களில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வாக்குச் சேகரித்தார்.
அங்கு பிரசாரத்தின் போது, ’’காவிரி டெல்டாவை சீரழிப்பதற்காக கொண்டு வரப்பட்ட திட்டங்களான ஹைட்ரோ-கார்பன், மீத்தேன், ஷேல் கேஸ் ஆகியவற்றை தடைசெய்ய தொடர்ந்து பாடுபடுவேன். பூம்புகாரில் மரைன் கல்லூரி அமைப்பதோடு, பாரம்பரிய வரலாற்றுச் சின்னங்கள் நிறைந்த அந்தநகரை மீண்டும் பழைமை மாறாமல் புனரமைக்க நடவடிக்கை எடுப்பேன். மீனவர்களின் வாழ்வை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன்,’’ என்பன உள்ளிட்ட தொகுதிக்கான வாக்குறுதிகளை அள்ளிவிட்டு வாக்கு கேட்டார்.