" பல்கலைக்கழகங்களாக இருந்தாலும் கல்லூரிகளாக இருந்தாலும் கட்டாயமாக தமிழும் ஆங்கிலமும் இருக்க வேண்டும்" என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர் "தமிழகத்தின் கல்விக்கொள்கையை உருவாக்குவதற்காக முதலமைச்சர் ஒரு குழுவை நியமித்திருக்கிறார். அந்த குழு என்ன சொல்கிறதோ அதை பல்கலைக்கழகம் பின்பற்ற வேண்டும். நம்மைப் பொறுத்தவரை இருமொழிக்கொள்கை முக்கியமானது. அண்ணா காலத்திலிருந்து தற்போது வரை பின்பற்றப்பட்டு வருகிறது. பல்கலைக்கழகங்களாக இருந்தாலும் கல்லூரிகளாக இருந்தாலும் கட்டாயமாகத் தமிழும் ஆங்கிலமும் இருக்க வேண்டும். தமிழகத்தில் தாய்மொழிக்கல்வியாக தமிழும் சர்வதேச தொடர்பு மொழியாக ஆங்கிலமும் இருக்கும். ஆகவே இருமொழி போதும் என்பது அண்ணா காலத்திலேயே கொண்டுவரப்பட்டது" என்று கூறினார்.