சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கலந்துகொண்டார். அண்மையில் உடல்நலக்குறைவு காரணமாகத் தனியார் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் உடல் நலம் தேறி வர வேண்டும் எனத் திரைப் பிரபலங்கள் மட்டுமல்லாது ரசிகர்கள், அரசியல் பிரபலங்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வந்தனர்.
இதையடுத்து, நேற்று முன்தினம் (14-12-23) நடைபெற்ற தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர் முதல் முறையாக கலந்துகொண்டார். அவருடன் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் நடத்தப்பட்ட ஆலோசனைப்படி கட்சியின் பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், பிரேமலதா விஜயகாந்த் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்ற பின் இன்று (16-12-23) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “அரசியல் என்பதே சவால்தான். அதிலும் இன்றைக்கு பெண்கள் அரசியலில் சந்திக்கின்ற சவால்கள் ஏராளம் இருக்கின்றன. அதற்கு மிகச் சிறந்த உதாரணம் ஜெயலலிதாதான். அரசியலில் என்னுடைய ரோல் மாடல் யார் என்று பல பேர் என்னிடம் கேட்பார்கள். அதற்கு நான் இந்திரா காந்தியையும், மம்தா பானர்ஜியையும் சொல்லலாம். ஆனால், அவர்களெல்லாம் அண்டை மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் எல்லாம் எனக்கு அறிமுகம் இல்லாதவர்கள். அதனால், தமிழகத்தில் நம்முடன் வாழ்ந்த ஜெயலலிதாதான் என்னுடைய ரோல் மாடல்.
தமிழகத்தில் தேமுதிக கட்சி எந்த நோக்கத்திற்காக தொடங்கப்பட்டதோ அதனை நிறைவு செய்வதுதான் எங்களுடைய லட்சியம். தமிழ்நாட்டின் அரசு தண்ணீரை சேமிப்பதில் திறனற்று இருக்கிறது. ஒருவேளை தண்ணீர் சேமிக்கப்பட்டால் மற்றவர்களிடம் நாம் கையேந்த தேவையில்லை. ஆறு முறை கலைஞர், ஐந்து முறை ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதல்வராக இருந்திருக்கிறார்கள். ஆனால், இன்று வரை மழைநீரில் தமிழ்நாடு சிக்கிக்கொள்கிறது என்றால் என்ன பொருள் என்பதை சிந்திக்க வேண்டும்” என்று கூறினார்.