தமிழக மக்கள் நல்லாட்சி கூட்டமைப்பு சார்பில், கடந்த மாதம் 20/2/2021 அன்று அரியலூர் மாவட்டம் முடிகொண்டான் கிராமத்தில் விவசாயிகள், விவசாயிகள் நலன் சார்ந்த அமைப்புகளை ஒருங்கிணைத்து தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி அன்றே 131 தேர்தல் வாக்குறுதிகளையும் வெளியிட்டு அதிரடி செய்தனர். அதனைத் தொடர்ந்து, சொன்னதோடு நில்லாமல் விவசாயிகள் தேர்தலில் பெருமளவில் 234 தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.
இந்தக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தங்க சண்முக சுந்தரம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்டத்தில், பொதுமக்களின் பங்களிப்பாக 1 ரூபாய் தாருங்கள் ரூ.10 ஆயிரம் டெபாசிட் தொகை கட்ட வேண்டும் என்று கையேந்தி பொதுமக்களிடம் கேட்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் தொடர்ந்து அரியலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்களிடம் டெபாசிட் தொகை கட்ட 1 ரூபாய் தாருங்கள் என்று தேர்தலில் விவசாயிகள் போட்டியிட வேண்டிய அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார். “மக்கள் ஆர்வத்துடன் பங்களிப்பை அளித்து வாழ்த்துகளைத் தெரிவித்தது, ஊழலற்ற வெளிப்படைத்தன்மையான நிர்வாகத்தை தர மக்கள் எங்களோடு துணை நிற்கிறார்கள் என்பதனையே காட்டுகிறது.
மாற்றத்திற்கான விதையை மக்கள் மனதில் விதைத்துள்ளோம். ஒரே நாளில் விதைகள் முளைக்கும் என்று எண்ணி களத்தில் நிற்கவில்லை. தொடர்ந்து மக்களுக்காக, விவசாயிகளுக்காக குரல் கொடுத்துக்கொண்டு வருகிறேன். மக்கள் கொடுத்த காசைக் கொண்டு இன்று (15/03/2021) டெபாசிட் தொகையைக் கட்டி உள்ளேன். இனி எந்த அரசியல் இயக்கங்களாக இருந்தாலும் விவசாயிகளின் நலனைப் புறக்கணித்தால் என்ன நடக்கும் என்பதனை, இந்தத் தேர்தலில் விவசாயிகள் தேர்தலில் போட்டியிட்டு விவசாயிகளின் ஓட்டு மூலம் ஜனநாயக கடமையை ஆற்றி பாடம் புகட்டுவார்கள்” என்று அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும் இதுகுறித்து கூறுகையில், “நாடு சுதந்திரமடைந்து பல்வேறு துறைகள் கண்ட அசுர வளர்ச்சியில் விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகப்பெரிய கேள்விக்குறியாகி உள்ளது. பாரம்பரிய விவசாயம் செய்த விவசாயிகளை இரசாயன வேளாண்மைக்குத் தள்ளிவிட்டு, தற்சார்பு கிராம பொருளாதாரத்தை இழந்து தொடர்ந்து விவசாயிகள் கடனில் தவிக்கின்றனர். வெறுமனே கடன் தள்ளுபடி என்பது தீர்வாகாது. விவசாயிகளுக்கு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, அனைத்து வணிக நிறுவனங்களுக்கு என பாகுபாடில்லாமல் 4 சதவீத வட்டியில் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்போதுதான் ஒட்டுமொத்த வளர்ச்சியை தமிழகம் எட்டும். எனவே விவசாயிகளைக் கடனாளியாக தொடராத நிலையை உருவாக்க நாங்கள் எங்கள் கூட்டமைப்பு சார்பாக வெற்றிபெற்று ஆட்சியமைத்தால் விவசாயிகளுக்கு 4 சதவீத வட்டியில் கடன் கொடுப்போம். விவசாயிகள் வாங்கிய கடனைக் கட்ட மாட்டான் என்ற பிம்பத்தை உடைக்க முறையாக கடனைத் திருப்பிச் செலுத்துபவர்களுக்கு 4 சதவீத வட்டியும், ஊக்கத்தொகையாக விவசாயிகள் இலாபகரமான நிலைக்கு உயரும் வரை அளிப்போம். எங்களது பிரச்சினைகளை எங்களால் தவிர வேறு எவராலும் புரிந்துகொள்ள முடியாது என்பதனாலேயே நாங்கள் இந்தத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறோம்” என்றார் தங்க சண்முக சுந்தரம்.