அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பகடியாக பதில் சொல்லியுள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஏப்ரல் 14 ஆம் தேதி திமுக அமைச்சர்கள் மேல் குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். அதில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வைத்திருக்கும் சொத்துக்களின் மதிப்பு 1023.22 கோடி ரூபாய் எனக் குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் திருச்சியில் தமிழ்நாடு முதலமைச்சரின் 70 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “பழைய படத்தில் ஒரு ஜோக் வரும். ஒருவர் ஆரம்பிக்கலாமா என்பார். அருகில் இருப்பவர்கள் ஆயிரம், ரெண்டாயிரம், மூன்றாயிரம் என சொல்லுவார்கள். இறுதியில் பிம்பிலிக்கா பிஸ்கோத்து எனச் சொல்லுவார். அம்மாதிரி சொல்லியுள்ளார். அன்பில் மகேஷின் சொத்து மதிப்பு 1023 கோடி என ஒரு அறிவிப்பு.
தலைமைக் கழகத்தில் இருந்து நோட்டீஸ் கொடுத்துள்ளார்கள். நிரூபிக்கவில்லை என்றால் நீங்கள் 500 கோடி அபராதம் கட்ட வேண்டும் என கூறியுள்ளார்கள். 1023 கோடி நீங்கள் எனக்கு விட்டுக்கொடுத்தால், ஒட்டுமொத்தமாக 38 ஆயிரம் அரசுப் பள்ளிகள் உள்ளன. ஒவ்வொரு பள்ளிக்கும் 2.50 லட்சம் மதிப்பில் புத்தகங்களை நான் வாங்கிக் கொடுக்கின்றேன். நல்ல அறிவு சார்ந்த புத்தகத்தை நான் வாங்கிக் கொடுக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.