ஆளுநர் காகிதப் புலி என்றும் அவரால் உறுமக்கூட முடியாது என்றும் பேப்பரில் வேண்டுமானால் வரைந்து வைத்துக் கொள்ளலாம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ்.அழகிரி, “முதலில் வீராவேசமாக ஒன்றை பேசுகிறீர்கள். உங்களால் அதே நிலையில் இருக்க முடியவில்லை. மீண்டும் பழைய இடத்திற்கு வருகிறீர்கள். முதலில் அங்கீகரிக்க மாட்டேன் என சொன்னவர் மறுநாள் அங்கீகரிக்கிறார். நீங்கள் தோற்றுவிட்டீர்கள். அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
மறுநாள் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி நீடிக்க முடியாது என்றார். நீங்கள் நீடிக்க வேண்டாம், நானே அரசாணை வெளியிட்டு நீட்டித்துக் கொள்கிறேன் என சொல்லி செந்தில்பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக முதலமைச்சர் நீட்டித்துவிட்டார். அது உங்களுக்கு இரண்டாவது தோல்வி.
இப்போது என்ன செய்துவிட்டீர்கள். அரசாணைக்குத் தடை விதித்துவிட்டீர்களா. என்ன செய்யமுடியும் அவரால். காகிதப்புலி அவர். உறுமக்கூட முடியாது. படம் வேண்டுமானால் வரைந்து வைத்துக்கொள்ளலாம். டெல்லியில் வெளிநாடுகளில் பதக்கம் பெற்ற இந்திய வீராங்கனைகள், இந்தியாவைச் சர்வதேச அளவில் பதக்கம் பெற வைத்தவர்கள் பாஜகவைச் சேர்ந்த எம்.பி. மீது குற்றம் சுமத்தியுள்ளனர். அந்த பாலியல் குற்றத்திற்காக அவரை நள்ளிரவில் கைது செய்தீர்களா. பாஜக நாடாளுமன்ற உறுப்பினருக்கு அவ்வளவு சட்டப் பாதுகாப்பு இருக்கிறது என சொன்னால் மாநில அரசின் அமைச்சருக்கு எந்த சட்டப் பாதுகாப்பும் இல்லையா” எனக் கூறினார்.