அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பண்ருட்டி ச. இராமச்சந்திரன் தலைமையில் சென்னை எக்மோர், பாந்தியன் சாலையில் உள்ள அசோகா ஹோட்டலில், இன்று (20-02-2023 திங்கட்கிழமை) காலை 10-00 மணிக்கு நடைபெறும் என ஓ.பி.எஸ் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் இன்று காலை 10 மணியளவில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்நிகழ்வில் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “திராவிடர் இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியாக அதிமுகவை உருவாக்கினார்கள். எம்ஜிஆர் எந்த நோக்கத்திற்காக இந்த இயக்கத்தை உருவாக்கினார்களோ அதை ஜெயலலிதா நிறைவேற்றினார். அதிமுக தொண்டர்களுக்கான இயக்கமாக எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டது. எம்ஜிஆரின் மறைவிற்கு பிறகு 16 ஆண்டுகாலம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர்.
தமிழ்நாட்டு அரசியலில் யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக இருவரும் உருவாக்கினார்கள். ஜெயலலிதா கழகத்தின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின் 30 ஆண்டுகளில் 1 கோடி தொண்டர்களை பெற்று யாராலும் அசைக்க முடியாத இயக்கமாக மாற்றினார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னால் கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர் அவர்தான் என தீர்மானம் நிறைவேற்றி மகிழ்ந்தோம். அதன் பின் நடந்தவைகள் உங்களுக்கு தெரியும்.
தொண்டர்கள் சேர்ந்து தலைமை பதவியை தேர்வு செய்ய வேண்டும் என்று அதிமுகவில் சட்ட விதியை கொண்டு வந்தார் எம்ஜிஆர். இதன் அடிப்படையில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை கொண்டு வந்தோம். அதை அடிப்படையாக வைத்தே 2021 வரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடுபவர்களுக்கு அதிகாரம் வழங்குகிற பணியை ஒருங்கிணைப்பாளர்களுக்கு அளித்தோம். தேர்தல் சின்னத்தை வழங்கும் முறையும் ஒருங்கிணைப்பாளர்கள் கையெழுத்திட்டு அளிக்கும் முறை இருந்தது. அந்த சட்ட விதியை எந்த அளவிற்கு சிதைக்க வேண்டுமோ அந்த அளவிற்கு சிதைத்துவிட்டார்கள்.
23 ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் நாங்கள் ஒருங்கிணைந்து 23 தீர்மானங்களை வடிவமைத்து அது நிறைவேற்றும் தீர்மானமாக அது அறிவிக்கப்பட்டு நிகழ்ச்சி நிரல் தயார் செய்யப்பட்டு பொதுக்குழு தயாரிக்கப்பட்டது. அக்கூட்டத்தில் தற்காலிக தலைவராக தமிழ்மகன் உசேனை நான் முன் மொழிய அந்த கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது. சர்வாதிகாரத்தின் உச்ச நிலைக்கு சென்று எந்த வித முன் அறிவிப்பும் இல்லாமல் 23 தீர்மானங்களும் ரத்து செய்யப்படும் என்று யாருடைய ஒப்புதலும் இல்லாமல் அறிவிக்கப்பட்டது.
பொருளாளர் என்ற முறையில் 13 ஆண்டுகளாக கழகத்தின் வரவு செலவு கணக்குகளை பொதுக்குழுவில் நான் வாசித்து சமர்ப்பிப்பேன். அதற்குக் கூட வாய்ப்பில்லாமல் அராஜகங்கள் நடைபெற்றது. அந்த அளவிற்கு அதிமுகவின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் நடந்து கொண்டார்கள். அது யாரென்று உங்களுக்கு தெரியும். அவரது பெயரைக் கூட உச்சரிக்க விரும்பவில்லை. அந்த தகுதியை இழந்துவிட்டார்.
ஜனநாயக நடைமுறையை தூக்கி எறிந்துவிட்டு தன் இரும்புப் பிடிக்குள் இந்த இயக்கத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என நடக்கிறார்கள். இரட்டை இலை சின்னம் வெற்றி பெற ஆதரவாக நின்று பாடுபடுவோம் என அறிக்கைவிட்டோம். வேட்பாளரை வாபஸ் பெற்றோம். ஆனால் எந்த மரியாதையும் இல்லை. ஓட்டு கேட்டு போகும்போது என்ன நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியும்” எனக் கூறினார்.