விருதுநகர் மாவட்ட புதிய அதிமுக மாவட்டச் செயலாளராக யார் வருவார்? மா.செ. பொறுப்பிலிருந்து கே.டி.ராஜேந்திரபாலாஜி விடுவிக்கப்பட்டு மூன்று மாதங்கள் நெருங்கியும்கூட, இன்னும் புதிய மா.செ. நியமிக்கப்படவில்லை. அதனால், ‘நான்.. நீ..’ என்ற அக்கப்போர் இந்த மாவட்டத்தில் நீடித்தபடியே உள்ளது.
கட்சி ஒருங்கிணைப்பாளர்களான ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும், விருதுநகர் மாவட்டச் செயலாளர் விஷயத்தில் ‘சைலண்ட்’ ஆக இருப்பதேன்? அக்கட்சியின் தலைமை அலுவலக வட்டாரத்தில் விசாரித்தோம்.
"கிட்டத்தட்ட தமிழகம் முழுவதுமே வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஆயத்தமாகி விட்டோம். கட்சியினரிடையே உத்வேகம் ஏற்படுவதற்காக அனைத்து மாவட்டங்களையும் இரண்டாக, மூன்றாகப் பிரிப்பதற்கு முடிவெடுத்துவிட்டோம். விருதுநகர் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இரண்டு இரண்டாக இரண்டு மாவட்டங்களும், மீதி மூன்று தொகுதிகளை உள்ளடக்கிய ஒரு மாவட்ட மாகவும் பிரிப்பதற்கு முடிவெடுத்துவிட்டோம். ஆக, விருதுநகர் மாவட்டத்தில் தேவர், நாயக்கர், நாடார் என மூன்று பிரிவினர்களை மனதில் வைத்து, மூன்று மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். இந்த மூவரைத் தேர்வு செய்வதில், முன்னாள் மா.செ.வான அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் ஆலோசனையோ, சிபாரிசோ நிச்சயம் ஏற்கப்படும். மூன்று மா.செ.க்களில் ஒருவராக கே.டி. ராஜேந்திரபாலாஜியே இருக்கலாம். அனேகமாக, அதற்கு அவர் ஒத்துக் கொள்ள மாட்டார்.
தேர்தலைச் சந்திக்கும் நேரத்தில், புதிய மா.செ.க்கள் நியமனம், எந்த தரப்பிலிருந்தும் அதிருப்தியையோ, சலசலப்பையோ ஏற்படுத்திவிடக் கூடாது என்பதை கட்சித் தலைமை கவனத்தில் கொள்ளாமல் இல்லை. அதனால், விருதுநகர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டாலும், மூன்றையும் கவனித்துக்கொள்ளும் மண்டல அளவிலான பொறுப்பினை கே.டி .ராஜேந்திரபாலாஜிக்கு தரக்கூடும். விருதுநகர் மாவட்டத்தில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும், இதே பாணியில்தான் நியமனங்கள் நடக்கும். கரோனா பரவல் ஓய்ந்து நிலைமை சீரான பிறகு புதிய மா.செ.க் கள் குறித்து அறிவிப்புகள் வெளியிடப்படும்'' என்று அங்கு விவாதிக்கப்பட்ட விஷயங்களை நம்மிடம் பகிர்ந்தார்கள்.
நியமனம் தள்ளிப் போவதால், ‘எப்போது கரோனா ஓய்ந்து... எப்போது அறிவிப்பு வெளியாகி?’என்று எரிச்சலில் இருக்கிறார்கள், விருதுநகர் மாவட்ட ஆளும்கட்சியினர்.