மத்திய அரசு சிவப்பு ரேஷன்கார்டுகளுக்கு வழங்கிய அரிசி மற்றும் பருப்பை வழங்காததைக் கண்டித்தும், மஞ்சள் ரேஷன் கார்டுகளுக்கு மாநில அரசின் நிதியில் இருந்து அரிசி வழங்க வலியுறுத்தியும் புதுச்சேரி மாநில எதிர்க்கட்சிகளான அ.தி.மு.க, என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று (16.04.2020) சட்டசபை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்திற்கு அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். இதில் அதிமுக எம்.எல்.ஏக்கள் பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஜெயபால், டி.பி.ஆர்.செல்வம், சுகுமாறன், பாஜக எம்.எல்.ஏ சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முதலில் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் சட்டசபை வளாகப் படிக்கட்டு மற்றும் வராண்டாவில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால் அதிருப்தி அடைந்த எம்.எல்.ஏ.க்கள் பின்னர் சட்டசபை நுழைவு வாயில் இரும்பு கேட்டுகளைப் பூட்டி மூன்றுபேர் உள்நுழையும் வாயில் முன்பும், மூன்றுபேர் வெளியே செல்லும் வாயிலிலும் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அன்பழகன் "முதல்வர் நாராயணசாமி இரு தினங்களில் அரிசி அளிப்பதாக உறுதியளித்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம்" என்று தெரிவித்துவிட்டு போராட்டத்தை தொடர்ந்தனர். பின்னர் முதல்வர் நாராயணசாமி பேச்சுவார்த்தைக்கு அழைத்ததை அடுத்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சென்று முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதேசமயம் மஞ்சள் கார்டுக்கு அரிசி வழங்க அனுமதி கோரி அமைச்சர் கந்தசாமி தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜ்நிவாஸ் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சர் கந்தசாமி தலைமையில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், விஜயவேணி, ஜெயமூர்த்தி ஆகியோர் சட்டசபையில் இருந்து நடந்து சென்று ஆளுனர் மாளிகை முன்பு மஞ்சள் கார்டுதாரர்களுக்கு அரிசி வழங்க தடையாக இருக்கும் ஆளுனர் கிரண்பேடியை கண்டித்தும், உடனடியாக மஞ்சள் கார்டுதாரர்களுக்கு அரிசி வழங்க அனுமதிக்கக் கோரியும் தர்ணா போராட்டத்தை நடத்தினர்.
அங்கு வந்த முதல்வர் நாராயணசாமி போராட்டத்தில் ஈடுபட்ட அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏக்களை சமரசம் செய்து போராட்டத்தை கைவிட வைத்தார். அப்போது அவர் " மக்களுக்கு அரிசி போடாததற்கு காரணம் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிதான். வேண்டுமென்றே கோப்புகளைக் கிடப்பில்போட்டு கால தாமதம் செய்கிறார்" எனக் குற்றம் சாற்றினார்.
இதனிடையே மஞ்சள் குடும்ப அட்டைதார்களுக்கு 10 கிலோ அரிசி வழங்க துணை நிலை ஆளுனர் ஒப்புதல் அளித்தார். புதுச்சேரியில் உள்ள அனைத்து மஞ்சள் அட்டைதார்களுக்கும் 3 மாதத்திற்கு 10 கிலோ அரிசி வழங்க ஒப்புதல் அளித்துள்ள கிரண்பேடி 'வருமான வரி கட்டுவோர், அரசு ஊழியர்களைத் தவிர்த்து வழங்கலாம்' என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதேசமயம் மஞ்சள், சிவப்பு அட்டைதாரர்களுக்கு அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் எனும் கோரிக்கை வலுத்துள்ளது. அரிசி வழங்கக்கோரி ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.