அ.தி.மு.க.வின் ஒரே எம்.பி.யாக ஓ.பி.ரவீந்திரநாத் குமார் டெல்லி சென்றதால், அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியும் அவருக்குக் கிடைத்தது. ஆனால், அவர் பெரிதும் எதிர்பார்த்த மந்திரி பதவி மட்டும் மிஸ்ஸிங். அதை எப்படியாவது கைப்பற்றி விடவேண்டும் என்று நாளும்பொழுதும் உழைத்துக் கொண்டிருக்கிறார். இதற்காக, முத்தலாக் தடைச் சட்டம், குடியுரிமைத் திருத்தச் சட்டம் போன்ற அடிப்படைவாத சட்டங்களுக்கு ஆதரவாக வாக்களித்தார்.
இது எதிர்க்கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இஸ்லாமிய மக்கள் மத்தியில் ஓ.பி.ஆர். மீது வெறுப்பு உண்டானது. மேலும், இந்துத்வா கூட்டங்களில் கலந்துகொண்டு, அதிரடியாக பேசிக் கொண்டிருக்கிறார். சில வாரங்களுக்கு முன்பு கம்பத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த ஓ.பி.ஆர். வாகனத்தின் மீது இஸ்லாமிய அமைப்பினர் சிலர் தாக்குதல் நடத்தினர். ஏரியாவில் மிகப்பெரிய பதற்றத்தை ஏற்படுத்திய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தொகுதிக்கு எப்போதும் பலத்த பாதுகாப்புடனே வருகிறார் ஓ.பி.ஆர்.
இந்நிலையில் தான், அரசியல்வாதிகள், வி.வி.ஐ.பி.க்களைப் போல, தானும் சொந்தமாக துப்பாக்கி வைத்துக்கொள்ளும் முடிவை எடுத்திருக்கிறார் ஓ.பி.ஆர். இதற்கான லைசன்ஸ் கேட்டு மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவிடம் மனுவும் கொடுத்திருக்கிறார். ஓ.பி.ஆரின் இந்த மனுவை ஆட்சியர் ஆய்வு செய்துவரும் நிலையில், கூடியவிரைவில் ஓ.பி.ஆருக்கு துப்பாக்கி வைத்துக்கொள்ளும் லைசன்ஸ் கிடைக்கவிருக்கிறது.