இ.பி.எஸ் நடத்திய பொதுக்குழு செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து, இ.பி.எஸ் மேல்முறையீடு செய்த வழக்கில் இன்று இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு இ.பி.எஸ்.க்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதிமுக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு வெளியாகி உள்ள நிலையில், தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், பெரியகுளத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்தார். அவரைச் சந்திக்க அவரது ஆதரவாளர்களான கோவை செல்வராஜ், வடசென்னை கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வந்து இருந்தனர். மேலும், ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்குள்ளிருந்து வெளியே குழுமியிருக்கும் செய்தியாளர்களைச் சந்திக்காத நிலையில், ஓபிஎஸ் வீட்டுக்குள்ளையே டென்ஷனாக இருந்தார். அதை கண்டு ஓ.பி.எஸ். ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, பத்திரிக்கையாளர்களிடம், “ஒன்றரை கோடி தொண்டர்கள் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் தான் இருக்கிறார்கள். தற்போது வந்த தீர்ப்பின் சாராம்சத்தை முழுவதுமாக கண்டு சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து மேல்முறையீடு செய்வது உள்ளிட்ட அடுத்த கட்ட நகர்வுக்கு செல்வோம். இது இறுதி தீர்ப்பு அல்ல. இரண்டாயிரத்திற்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுத்த இடைக்கால பொதுச் செயலாளர் செல்லாது. ஒன்றை கோடி தொண்டர்கள் ஓ. பன்னீர்செல்வம் பக்கமே இருக்கிறார்கள்” என்று கூறினார்.