Skip to main content

“அனைத்து வரி உயர்வுகளையும் திரும்பப்பெற  வேண்டும்” - இ.பி.எஸ். வலியுறுத்தல்!

Published on 31/12/2024 | Edited on 31/12/2024
All tax hikes should be rolled back EPS Emphasis

உயர்த்தப்பட்ட தொழில்வரி உள்ளிட்ட அனைத்து வரி உயர்வுகளையும் திரும்பப்பெற  வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை பெருநகர மாநகராட்சி சென்னை வாழ் மக்களுக்குப் புத்தாண்டு பரிசாக சுமார்  35 சதவீத தொழில்வரி உயர்வை அறிவித்துள்ளதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

2024-2025 இரண்டாம் அரையாண்டு முதல் தொழில் வரி உயர்வு அமல்படுத்த நேற்று சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. 44 மாத கால திமுகவின் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் சென்னை மாநகரின் முக்கிய சாலைகளான அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, காமராஜ் சாலை, நெல்சன் மாணிக்கம் சாலை, வடபழனி - போரூர் சாலை, சர்தார் வல்லபாய் படேல் சாலை, இ.சி.ஆர். சாலை, ஓ.எம்.ஆர். சாலை என்று அனைத்து முக்கிய சாலைகளுமே குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கின்றன. அனைத்து முக்கியச் சாலைகளின் நிலையே இப்படியெனில், மாநகரில் உள்ள மற்ற சாலைகளின் நிலையோ மிகவும் பரிதாபகரமாக உள்ளது. இதனால் நாள்தோறும் சாலை விபத்துக்கள் நடந்தவண்ணம் உள்ளன.

ஏற்கனவே சொத்து வரி, குடிநீர் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில், இனி ஆண்டுதோறும் 6 சதவீத வரி உயர்வு அமல்படுத்தப்படும் என்றும், இவற்றோடு குப்பை வரி, கட்டிட வரைபட கட்டணங்கள் உயர்வு உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில், இந்த தொழில்வரி உயர்வினால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், வணிகர்கள் என்று சுமார் 75 சதவீத மக்கள் பாதிப்புக்குள்ளாகக் கூடிய நிலை உருவாகியுள்ளது. மக்களின் சுமையைக் குறைக்கும் வகையில் உயர்த்தப்பட்ட தொழில்வரி உள்ளிட்ட அனைத்து வரி உயர்வுகளையும் திரும்பப்பெற திமுகவின் முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்