கடந்த மே மாதம் நடைபெற்ற கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை தனித்து நின்று தேர்தலை சந்தித்தன. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று முதல்வர் சித்தராமையா தலைமையில் ஆட்சி நடத்தி வருகிறது. இந்தத் தேர்தல் முடிவானது வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான், தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டும், அதே சமயம் 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது. இந்த தேர்தல் முடிவை பார்க்கும் போது மக்கள் மாற்றத்தை விரும்புவது தெரிகிறது. ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புவதால் நாட்டில் பாஜகவுக்கு எதிரான அலை வீசுகிறது. இதை சொல்வதற்கு ஜோதிடர் தேவை இல்லை. கர்நாடக தோல்வியை தொடர்ந்து மத்தியில் பாஜக வரும் நாடாளுமன்ற தேர்தலில் மட்டுமே கவனம் செலுத்தும். மேலும் நாடாளுமன்ற தேர்தலுடன், மாநில சட்டமன்ற தேர்தல்களையும் சேர்த்து நடத்தும் திட்டம் குறித்து குழப்பி கொள்ள வாய்ப்பில்லை " எனத் தெரிவித்துள்ளார்.