பாஜக தொடங்கப்பட்ட தினத்தைக் கொண்டாடும் வகையில் நேற்று (06.04.2023) நாடு முழுவதும் பாஜகவினர் 44வது நிறுவன தினத்தைக் கொண்டாடினர். மேலும் கட்சியின் சின்னமான தாமரையை சுவர்களில் வரையும் பிரச்சாரத்தையும் முன்னெடுத்தனர்.
அந்த வகையில் டெல்லியில் அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, சுவரில் தாமரையை வரைந்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பாஜகவின் நிறுவன தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடும் வகையில் சுவரில் தாமரை வரையும் நிகழ்ச்சி தொடங்கி உள்ளது. இதனை அனைத்து மாநிலத் தலைவர்களும் மேற்கொள்வார்கள்" என்று தெரிவித்தார்.
இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் உள்ள தொண்டர்களிடம் பிரதமர் மோடி காணொளி வழியாக உரையாற்றினார். அப்போது பேசிய மோடி, "இந்தியாவில் ஊழலை ஒழித்து தேச பக்தியை உருவாக்க அரசு கடுமையான முயற்சிகளை எடுத்து வருகிறது. அரசுக்கு எதிராக பல்வேறு சவால்களை எதிர்க்கட்சியினர் முன்வைத்து வருகின்றனர். எதிர்க்கட்சியினர் தொடர்ச்சியாக பொய் பேசுகிறார்கள். தங்கள் ஊழல் செயல்கள் அம்பலமாகி நிம்மதியை இழந்து விரக்தி அடைந்துள்ளனர். மோடிக்கு கல்லறை தோண்ட வேண்டியது தான் என்று வெளிப்படையாக சொல்கிறார்கள். உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக இருந்தாலும், அதற்காக நாம் மெத்தனமாக இருக்க வேண்டியதில்லை.
2024ல் பாஜகவை யாராலும் தோற்கடிக்க முடியாது என்று மக்கள் இப்போதே சொல்லத் தொடங்கிவிட்டனர். இது உண்மைதான். எனவே பாஜக தொண்டர்களாகிய நாம் ஒவ்வொரு குடிமக்களின் இதயத்தையும் வெல்லும் பணியைத் தொடங்க வேண்டும். நம்முடைய வெற்றி வாக்குகளைப் பெறுவதில் மட்டும் இருந்துவிடக்கூடாது. கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வெல்வதே நமது இலக்கு. ஜன சங்க காலத்தில் இருந்து நாம் எவ்வளவு கடினமாக உழைத்தோமோ அவ்வாறே ஒவ்வொரு காலத்திலும் உழைக்க வேண்டும். நாட்டை விட்டு ஆங்கிலேயர்கள் 1947ல் வெளியேறி இருக்கலாம். ஆனால் அவர்கள் சிலரின் மனதில் மக்களை அடிமைகளாக நடத்தும் விதைகளை விட்டுச் சென்றனர். அந்த அதிகாரத்தை தங்கள் பிறப்புரிமையாகக் கருதி அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் பாஜகவுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டி வருகிறார்கள்" என்று பேசினார்.