அதிமுக பாஜக கூட்டணியில் அண்ணாமலை பேச்சுகளால் முரண்கள் ஏற்பட்டு முன்னாள் அமைச்சர்கள் எதிர்வினையாற்றும் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. அண்மையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அண்ணாமலை பேசியது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு ஜெயக்குமார், சி.வி. சண்முகம் ஆகிய முன்னாள் அமைச்சர்கள் எதிர்வினை ஆற்றி இருந்தனர். அதேபோல அண்மையில் அண்ணா குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் ஜெயக்குமார் அதிமுக - பாஜக கூட்டணி இல்லை என தெரிவித்திருந்தார். இந்த கருத்திற்கு அடுத்த இரண்டு நாட்களிலேயே பாஜக அதிமுக கூட்டணியில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தி இருந்தார். இந்தநிலையில் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற கருத்தை அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் அதிமுக தலைமை பாஜக கூட்டணி குறித்த நிலைப்பாட்டை உறுதிபடத் தெரிவிக்கும் என கூறப்படுகிறது. அதேநேரம் அண்ணாமலைக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்படும் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.
இதனையடுத்து நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “கூட்டணியைப் பொறுத்தவரை கடந்த 18ம் தேதி, கூட்டணி இல்லை என எடுத்த முடிவு தான்” என உறுதிபடக் கூறியிருந்தார். இந்த நிலையில், பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினரும், தமிழக பா.ஜ.க சட்டமன்ற குழுத் தலைவருமான நயினார் நாகேந்திரன் நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவரிடம், கூட்டணி குறித்து ஜெயக்குமார் கூறியது பற்றி செய்தியாளர்கள் தரப்பில் இருந்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “நான் அதிமுகவில் இருந்து வெளியே வந்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டது. என்னைப் பொறுத்தவரை அந்த கட்சியின் பொதுச் செயலாளருக்கு தான் முழு அதிகாரம் உண்டு என்று நான் நினைக்கிறேன். பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று ஜெயக்குமார் எந்த சூழ்நிலையில் இப்படி கூறினார் என்று தெரியவில்லை. எனவே, இந்த கருத்தை பொதுச் செயலாளர் பதவியில் இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி கூறினால் தான் ஏற்றுக்கொள்ள முடியும்” என்று கூறினார்.