இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என விரும்பினால் 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தங்களோடு இணைந்தால் அது சரியான முடிவாக இருக்கும் என பாரதிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
செய்தியாளர் சந்திப்பில் நேற்று பேசியிருந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ''இதில் போட்டி பொறாமை கிடையாது. 2024 ஆம் ஆண்டை பொறுத்தவரை சீமானே எங்கள் பக்கம் சேர்ந்து மோடிக்கு 400க்கும் மேற்பட்ட எம்பிக்களை கொடுப்போம், வலிமையான இந்தியாவை உருவாக்குவோம் இலங்கை பிரச்சனை அப்பொழுதுதான் தீரும் இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என சீமான் நினைத்தால் மத்திய அரசில் மோடி இருந்தால்தான் அது முடியும் இது அவருக்கும் தெரியும்'' என்றார்.
செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வியை முன்வைத்தபோது அதற்கு பதிலளித்த அவர் ''முதலில் அண்ணாமலைக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். அவரே முதலாளி போல் பேசிக் கொண்டிருக்கிறார். முதலாளி அவர் கிடையாது அவர் ஒரு மேஸ்திரி. தமிழ்நாட்டுக்கு ஒரு மேஸ்திரி. அவரே டெல்லிக்கு காவடி தூக்குகிற ஒரு அடிமை. இதை அமித்ஷாவும் மோடியும் சொல்ல வேண்டும். ஈழத்தமிழர்களைப் பற்றி 8 வருடமாக பேசாத பிரதமர் மோடி இனிமேல்தான் ஈழத்தைப் பற்றி பேசப் போகிறாரா? அங்கு செல்லும்போது கூட தமிழ் மக்களைப் பற்றி எதுவும் பேசவில்லை. அவர் என்னமோ திடீர்னு வந்துவிட்டு என்னோடு சேர்ந்து போராட வா என்கிறார்'' என்றார்.