தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஓபிஎஸ் அணியினர் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று தர்மபுரியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும் போது டிடிவி தினகரன் வீட்டில் காமராஜ் வேலை செய்தவர். எங்களை பற்றி பேசுவதற்கு அவருக்கு எந்த தகுதியும் இல்லை என பேசி இருந்தார்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் காமராஜ் நேற்று மன்னார்குடியில் வைத்தியலிங்கத்தின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "வைத்திலிங்கத்துடன் இருந்தவர்கள் எல்லாம் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து விட்டனர். கடந்த சில தினங்களாக வைத்திலிங்கம் அருவருக்கத்தக்க வகையில் வார்த்தைகளைப் பயன்படுத்தி வருகிறார். அவர் தன்னிலை மறந்து பேசக்கூடாது. நான் எந்த தொகுதியிலும் நின்று ஜெயிக்கக் கூடிய தெம்பு உள்ளவன். வைத்திலிங்கம் வரும் தேர்தலில் எந்த தொகுதியில் எந்த சின்னத்தில் நிற்பார். அரசியலில் அனாதையாகிவிட்ட வைத்தியலிங்கம் என்ற கல்லை கழுத்தில் கட்டிக்கொண்டு கடலில் இறங்கிய ஓபிஎஸ்சின் நிலை பரிதாபத்துக்குரியது.
கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வைத்தியலிங்கம் தோல்வியடைந்த பின்னர், சசிகலா குடும்பம் தான் தன்னை தோற்கடித்ததாக ஜெயலலிதாவிடம் கூறி ராஜ்யசபா உறுப்பினரானவர் தான் வைத்திலிங்கம். வேலைக்காரி எப்படி மகாராணி ஆக முடியும் என கேட்ட வைத்தியலிங்கம் தான் தற்போது சசிகலா, டிடிவி தினகரனுடன் ஒன்றிணைந்து விட்டோம் என கூறுவது பச்சை பச்சோந்தி தன அரசியலாகும்" என பதிலடி கொடுத்துள்ளார்.