தனது குருவான அத்வானியை மதிக்கத் தெரியாதவர்தான் பிரதமர் மோடி என ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சி உருவாவதற்கு காரணமானவர்களுள் ஒருவருமான எல்.கே.அத்வானி, தற்போது அக்கட்சியால் அதிகம் புறக்கணிக்கப்படும் நபராக இருக்கிறார். திரிபுராவில் பா.ஜ.க. ஆட்சியமைத்த மேடையில் பிரதமர் மோடியை நோக்கி வணங்கியும், அவரைக் கண்டுகொள்ளாமல் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பின.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ‘எல்.கே.அத்வானிதான் பிரதமர் மோடியின் குரு. ஆனால், நான் பார்த்த நிகழ்ச்சிகளில் மோடி அத்வானியை மதித்ததாகவே தெரியவில்லை. அத்வானியின் இந்த நிலையை எண்ணி நான் வருந்துகிறேன். காங்கிரஸ் கட்சி அத்வானிக்கு தந்த மரியாதை அளவுக்குக் கூட மோடி தரவில்லை என்பதுதான் உண்மை’ என பேசியுள்ளார்.
மேலும், ‘பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை ஒழித்துக்கட்ட காங்கிரஸால் மட்டுமே முடியும். கர்நாடகாவில் தோற்று, குஜராத்தில் பலவீனமாக வெற்றிபெற்று பா.ஜ.க. நலிவடைந்திருக்கிறது. இனி வரும் தேர்தல்களில் எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்புடன் அந்தக் கட்சியை முழுமையாக ஆட்சியில் இருந்து கீழிறக்குவோம்’ எனவும் தெரிவித்துள்ளார்.