பிரதமர் மோடி, சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேறுவது பற்றி நினைப்பதாக ட்வீட் போட்டதும் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி கேட்ட போது, உலகில் ஒபாமா, டிரம்ப்புக்கு அடுத்தபடியாக பிரதமர் மோடியைத் தான் 5 கோடியே 33 லட்சம் பேர் ட்விட்டர்ல பின் தொடர்வதாக கூறுகின்றனர். திடீரென்று மோடி விலகுவதாக ட்வீட் செய்ததும் எதிர்பார்ப்பும் பரபரப்பும் இருக்கத்தான் செய்யும் என்கின்றனர்.
மேலும் இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வந்த நேரத்தில் தான் டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவுக்கு எதிரான போராட்டம், கலவரமாக உருவானது. இந்த நேரத்தில் மோடியும், டிரம்ப்பும் சந்தித்தது தொடர்பான சமூக வலைத்தளச் செய்திகளை நொடிக்கு 25 ஆயிரம் பேர் வீதம் பார்த்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதில் பின்னூட்டம் போட்ட பலரும், டெல்லி கலவரத்தில் மசூதியில் அனுமன் சேனா ஆட்கள் காவிக்கொடியை ஏற்றிய காட்சியையும், மசூதிக்கு தீ வைக்கும் காட்சியையும் பதிவு செய்து உலக அளவில் இந்த சம்பவத்தை எடுத்து சென்றதாக சொல்லப்படுகிறது. இதில் மோடி படுஅப்செட். அதனால்தான் அப்படி ஒரு ஆலோசனை என்று கூறுகின்றனர்.
பின்பு மோடியின் இந்த அறிவிப்பைப் பார்த்த ராகுல்காந்தி, நீங்க வெளியேற வேண்டியது சமூக ஊடகங்களில் இருந்து அல்ல; வெறுப்பு அரசியலில் இருந்து என்று பதிலடி கொடுத்தார். இதனையடுத்து மோடி முடிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் அதிகமாக இருந்தது. இதனால் இமேஜ் டேமேஜ் ஆகாமல் காப்பாற்ற என்ன பண்ணலாம் என்று பா.ஜ.க. நிர்வாகிகளிடமும் தன்னோட அரசியல் ஆலோசனை டீமிடமும் மோடி ஆலோசித்து, மார்ச் 8 மகளிர் தினத்தில், ட்விட்டரிலிருந்து தான் ஒதுங்குவதாகவும், அன்றைய தினம் அதை சமூக அக்கறையுள்ள பெண்களே நிர்வாகம் செய்வார்கள் என்றும் பாசிட்டிவ்வான ட்வீட் செய்து முற்றுப்புள்ளி வைத்தார்.