தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், ஆர்வலர்கள் ஒவ்வொரு இடத்திற்கும் போய் மக்களுக்கான நிவாரண பொருட்கள் வழங்கியபோது அப்படி தனியார் நிறுவனங்கள் கொடுத்த அந்த நிவாரண பொருட்களில் கொஞ்சம்கூட கூச்சம் இல்லாமல் அதிமுகவினரை வைத்து அவர்களது பெயர்களையும், ஸ்டிக்கரையும் ஒட்டிக்கொண்ட ஆட்சி அதிமுக ஆட்சி என்பதை மறந்துவிடக்கூடாது.
இன்னும் சொல்லப்போனால் பொங்கலுக்கு கொடுத்த கரும்பில் கூட கரும்பின் ஒவ்வொரு கணுக்களில்கூட ஸ்டிக்கரை ஒட்டிய ஆட்சிதான் அது. இன்று திமுக ஆட்சியில் பொங்கல் பையாக இருந்தாலும், எந்த பொருளாக இருந்தாலும் அதில் முதல்வர் புகைப்படம் கூட இல்லாத நல்ல சூழலலை உருவாக்கியுள்ள ஆட்சி திமுக ஆட்சி என நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். அவர்களைப்போல் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. ஆனால் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களில் எல்லாம் எவ்வாறு அதிமுக ஸ்டிக்கர் ஒட்டினார்கள் என நான் விளக்கங்களைச் சொல்லியாக வேண்டும்.
உதாரணத்திற்கு ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம். 2008 ல் கலைஞர் 1928 கோடி ரூபாயில் கொண்டுவந்த திட்டம். ஆகஸ்ட் 26, 2008 அன்று கலைஞர் அந்த திட்டத்தைத் தொடங்கிவைத்தார். அப்பொழுது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த தற்போதைய முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 95 சதவிகிதம் பணிகள் முடிந்தது. 2013 -ல் மீதம் இருக்கும் 5 சதவிகித பணியைமட்டும் பார்த்துவிட்டு குழாயில் தண்ணியை மட்டும் திறந்துவைத்துவிட்டு அதை தான் செய்ததாக அதிமுக ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டதை நாட்டுமக்கள் மறந்துவிட முடியாது. அதேபோல் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம். கலைஞர் உருவாக்கிய கோயம்பேட்டில் அவரது கல்வெட்டை மறைத்துவிட்டு ஏதோ அதிமுக ஆட்சிதான் அதை உருவாக்கியதைப்போல நாடகமாடினார்கள். அதேபோல் புதிய தலைமைச்செயலகம் அமைக்க கட்டப்பட்ட கட்டிடத்தை ஓமந்தூரார் மருத்துவமனையை என்று போட்டு ஏதோ தாங்கள்தான் உருவாக்கியதை போன்று ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது அதிமுக ஆட்சி. நீங்கள் பெற்ற பிள்ளைகளுக்கு பேர் வச்சீங்களே சோறு வச்சீங்களா? என்றுதான் கேட்க விரும்புகிறேன்'' என்றார்.