Skip to main content

மு.க.ஸ்டாலின், இபிஎஸ் வரிசையில் அண்ணாமலை வெளியிட்ட வீடியோ

Published on 16/06/2023 | Edited on 16/06/2023

 

M.K.Stalin, Annamalai released the video on EPS

 

செந்தில் பாலாஜி கைது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோவிற்கு பதில் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் அதே பாணியில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அந்த வீடியோவில், “தொட்டுப்பார், சீண்டிப்பார் போன்ற வார்த்தைகளை திமுக மேடைகளில் பலமுறை கேட்டுள்ளோம். திமுகவின் இரண்டாம் கட்ட பேச்சாளர்களுக்கு இது கைவந்த கலை. எட்டரை கோடி மக்களுக்கு முதலமைச்சராக உள்ள மு.க.ஸ்டாலின் இது போன்ற தரம் தாழ்ந்த வார்த்தைகளை மக்கள் முன் வைத்துள்ளீர்கள். அப்படி என்ன தமிழ்நாட்டில் நடந்துவிட்டது. நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்த போது என்ன வேண்டும் என கூறினீர்களோ, அதுதான் இன்று நடந்துள்ளது. 

 

2016 ஏப்ரல் 18 ஆம் தேதி நீங்கள் கரூர், குளித்தலை சென்றீர்கள். அப்போது செந்தில் பாலாஜி எதிர்க்கட்சி வரிசையில் இருந்தார். அவரைப் பார்த்து குற்றவாளி, ஊழல்வாதி என்றெல்லாம் சொன்னீர்கள். இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொன்னீர்கள். இன்று 7 ஆண்டுகள் கழித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை தமிழ்நாடு முதலமைச்சராக வரவேற்றிருக்க வேண்டும். யாரோ ஒரு குற்றவாளியை பாதுகாக்க உங்கள் பதவியை அடமானம் வைப்பதாக தமிழ்நாடு மக்கள் பேசி வருகிறார்கள். அவர் கைது செய்யப்பட்ட பின் நடந்த கூத்துகளைப் பாருங்கள். 

 

நள்ளிரவில் உங்களுடைய அமைச்சரவையில் இருக்கக்கூடிய அமைச்சர்கள் விரைந்து அங்கு போகிறார்கள். உங்கள் மகன் உதயநிதி ஸ்டாலின் அங்கு செல்கிறார். உங்கள் மருமகன் சபரீசன் அங்கு செல்கிறார். கிட்டத்தட்ட அந்த ஐசியு பிரிவு ஏதோ அமைச்சரவை கூட்டம் நடப்பது போல் உங்கள் தலைமையில் அங்கு உள்ளது. செந்தில் பாலாஜி ஐந்து கட்சிகள் மாறி வந்திருப்பவர். 2018-ல் உங்கள் கட்சியில் சேர்ந்தவர். முதல் குற்றவாளியாக இருந்து இந்த குறிப்பிட்ட குற்றத்தில் பணம் வாங்கிக் கொண்டு, 2018-ல் அவர் மேல் எஃப்.ஐ.ஆர் போடப்பட்டு ஜார்ஜ் சீட் போடப்பட்ட ஒரு நபர். 

 

செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்பு சட்டம் போட வேண்டும் என்று ஏழெட்டு மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் சொல்லியிருந்தது. ஆனால் உங்களுடைய கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை மூலம் நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இரண்டு மூன்று வாரத்திற்கு முன்பு மீண்டும் உச்சநீதிமன்றம் சொல்லியது. தமிழ்நாடு காவல்துறை செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்பு சட்டம் போடவில்லை என்றால் நாங்களே இந்த வழக்கை எடுத்து நடத்துவோம் என்று சொல்லி உள்ளார்கள். ஆனால் இன்னும் உங்கள் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.

 

இதை நீங்கள் ஒருதலைபட்சமாக பார்க்கிறீர்கள் என்றால் செந்தில் பாலாஜியை பாதுகாப்பதற்காக உங்கள் பொறுப்பை பயன்படுத்துகிறீர்களா அல்லது தமிழ்நாட்டில் உள்ள எட்டரை கோடி மக்களின் துணை நிற்கிறீர்களா என்று கேள்வி தமிழ் மக்களுக்கு வருகிறது. நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது மத்திய அரசு காவல் படை உங்களுக்கு தேவைப்பட்டது. நீங்கள் கேட்டீர்கள், உங்களுக்கு கொடுத்தார்கள். மத்திய அரசின் பாதுகாப்பு படையை உங்கள் பக்கத்திலேயே வைத்திருந்தீர்கள். 2014 ஆம் ஆண்டுக்குப் பின் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் நீங்கள் எத்தனை முறை சிபிஐ விசாரணை கோரிக்கை கேட்டுள்ளீர்கள்.

 

முதலமைச்சர் பேசிய பேச்சு தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. முறைதவறி பேசி எதிர்க்கட்சிகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்கள். தமிழ்நாட்டில் காவல்துறை உங்கள் கைகளில் உள்ளது. நாங்களும் தயாராகத்தான் உள்ளோம். தினமும் 2, 3 தொண்டர்களை கைது செய்கிறீர்கள். அதிகாலை 2 மணி, 3 மணிக்கு கைது செய்கிறீர்கள். அதையெல்லாம் நாங்கள் பொறுத்துக்கொண்டு பார்த்துக்கொண்டு வருகிறோம். எங்கள் பொறுமைக்கும் எல்லை உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்