ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 27 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோரை ஈரோட்டில் முகாமிட வைத்து கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய மிகத் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளது திமுக. இந்நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நக்கீரன் டிவி யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.
ஈரோடு கிழக்கு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து இருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், "பாஜகவும் அதிமுகவும் ரயில் தண்டவாளம் மாதிரி தான் சென்று கொண்டிருக்கிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பாஜகவிற்கு அதிமுகவை விட்டால் நாதி இல்லை. அதிமுகவிற்கு பாஜகவை விட்டால் நாதி இல்லை. அதனால் தான் பாஜக அதிமுகவை மிரட்டி கையில் வைத்து உள்ளது. இது தான் இன்று இருக்கக்கூடிய சூழல். அதனால் இரண்டு பேரும் ஒன்றாகத் தான் இருப்பார்கள். ஒன்றாகத் தான் தேர்தலைச் சந்திப்பார்கள். இவர்கள் என்ன கருத்துகள் பேசுகிறார்கள்; நாடாளுமன்றத்தில் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள்; எந்தெந்த மசோதாக்களை ஆதரிக்கிறார்கள் என்று மக்கள் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். மக்களை ஏமாற்றுவதற்காக இவர்களின் கொடியை அவர்களும் அவர்களின் கொடியை இவர்களும் தங்கள் பிரச்சாரங்களில் பயன்படுத்துவதில்லை. இது எல்லாம் மக்களுக்கு தெரியாமலா இருக்கிறது.
இன்று வரைக்கும் ஆன்லைன் ரம்மி தடைக்கு ஆளுநர் கையெழுத்து இடாமல் நிலுவையில் இருக்கிறது. அதிமுக இதனைப் பற்றி பேசலாம் இல்லையா. இளைஞர்கள் பணத்தை இழந்து பலியாகின்றனர். இதற்கு குரல் கொடுக்க முடியவில்லை. குரல் கொடுக்கும் அளவுக்கு தைரியம் இல்லை. குரல் கொடுக்கும் அளவிற்கு முதுகெலும்பு இல்லை. நாட்டின் நலனுக்காக கட்சியை நடத்த வேண்டும். ஆனால், எடப்பாடி பழனிச்சாமி தன்னை முன்னிறுத்தி கட்சி நடத்துகிறார். எடப்பாடி பழனிசாமி முதல்வரை பற்றி பேசுவதற்கு அருகதை இல்லை; தகுதி இல்லை. இதோடு அவர் நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லையெனில் வேறு விதமான எதிர்மறையான கருத்தை சந்திக்க நேரிடும்" என எச்சரிக்கை விடுத்தார்.