தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்பாளர்கள் இறுதி பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டதைத் தொடர்ந்து கட்சியினரும், சுயேச்சை வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வேலகவுண்டனூரில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய அவர், "தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் நடக்கும் தேர்தலில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். மேற்கு வங்காளத்தில் என்ன ஆனது என்று பார்க்க வேண்டும். மேற்கு வங்காளத்தில் ஆளுநர் அங்கு சட்டசபையையே முடக்கி உள்ளார். அதே தமிழ்நாட்டிலும் இதேபோல் ஆட்சியில் தவறுகள் நடந்தாலும் ஆளுநர் சட்டசபையை முடக்கும் நிலை ஏற்படலாம். அதே நிலைமை இங்கே தமிழ்நாட்டிலும் எதிர்காலத்திலும் நிலவும். திமுக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் வரும்போது மீண்டும் அ.தி.மு.க ஆட்சிக்கு வருவது உறுதி" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இதற்கு பதிலடி தரும் வகையில் பேசியுள்ள அமைச்சர் சேகர்பாபு, "தமிழக சட்டப்பேரவையை முடக்க நினைக்கும் பழனிச்சாமியின் கனவு நிச்சயம் பலிக்காது. அதிமுகவின் ஆசையைத் தனது பேச்சின் மூலம் மத்திய அரசுக்கு அவர் தெரியப்படுத்தியுள்ளார். முடக்கினால்தான் அடுத்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி என அதிமுக மிரட்டியுள்ளது." என்று தெரிவித்துள்ளார். அதேபோல, 27 அமாவாசைகளில் திமுகவின் ஆட்சி கலையும் என அதிமுகவினர் கூறிவரும் நிலையில், அதுகுறித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, "இன்னும் 27 அல்ல, 297 அமாவாசைகள் வந்தாலும் திமுக ஆட்சிதான் அமையும்" என்று தெரிவித்துள்ளார்.