புதுக்கோட்டை மாவட்டம், அகரப்பட்டி, பெருமாள்பட்டி ஆகிய இடங்களில் புதிதாக அங்கன்வாடி மைய கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த கட்டிடங்களை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். அதன் பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், “அகில இந்திய அளவில் மதுவிலக்கு கொண்டு வந்தால் பூரண மதுவிலக்கு சாத்தியம். அதே சமயத்தில், பூரண மதுவிலக்கு என்பது தமிழக முதல்வரின் லட்சியம். அதை நிறைவேற்றுவது நிச்சயம். 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வருவோம் என்று தான் சொன்னோம். அதனால் தான் 15, 20 இடங்களில் தி.மு.க வெற்றி பெற முடியவில்லை என்ற குற்றச்சாட்டுக்கூட எழுந்தது. ஆனால், இந்த தேர்தலில் நாங்கள் படிப்படியாக மதுக்கடைகளை குறைப்போம் என்று தான் சொன்னோமே தவிர, பூரண மதுவிலக்கு உடனடியாக கொண்டு வருவோம் என்று சொல்லவில்லை.
பூரண மதுவிலக்கு என்பது எங்களுடைய லட்சியம். படிப்படியாக மதுக்கடைகளை குறைப்பது என்பது நிச்சயம். நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, 500 மதுக்கடைகளை குறைத்திருக்கிறோம். அரசியல் கட்சியை ஆரம்பிக்கும் எல்லோரும் கூறும் கருத்துக்களைத் தான் விஜய்யும் சொல்லியிருக்கிறார். எங்களை பொறுத்தவரைக்கும், நாங்கள் எங்கள் பாதையில் தெளிவாக இருக்கிறோம். எங்கள் இலக்கில் தெளிவாக இருக்கிறோம். 2026 எங்களுடைய இலக்கு. 234 லட்சியம்; அதில் 200 நிச்சயம்” என்று கூறினார்.