சென்னை காந்தி மண்டபத்தில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அங்கு மது பாட்டில்கள் இருந்ததாகக் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆளுநரின் இந்த குற்றச்சாட்டுக்குப் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “ஆன்லைன் ரம்மியின் பிராண்ட் அம்பாசிடர் போல, நீட் தேர்வுக்கு பி.ஆர்.ஓ. போல, இருந்தால் எப்படி நடவடிக்கைகள் இருக்குமோ அந்த நடவடிக்கைகளைத் தான் தமிழக ஆளுநர் மேற்கொண்டு இருக்கிறார். காந்தி மண்டப வளாகத்திலேயே, மது பாட்டில்கள் கண்டறியப்பட்டு இருப்பதாகச் செல்கிறார். இது மிகுந்த வருத்தமளிப்பதாகக் கூறியுள்ளார். ஆளுநர் உடன் ஒரு கேமராமேன் செல்கிறார். ஆளுநருக்கும் அந்த கேமராமேனுக்கும் மட்டும் அந்த மது பாட்டில் தெரிந்திருக்கிறது. ஒரு பாட்டில் கிடந்ததை அதை ஆளுநர் மது பாட்டில் என்கிறார்.
இரவு நேரத்தில் சென்னை மாநகரத்தைச் சுத்தம் செய்கின்ற பணியைச் சென்னை மாநகராட்சி மிகச் சிறப்பாகச் செய்து வருகிறது. காமராஜர் நினைவகம், காந்தி மண்டபம் உள்ளிட்ட இடங்களில் பகல் நேரங்களில் அங்கிருக்கக் கூடிய தொழிலாளர்களை வைத்துக்கொண்டு சுத்தம் செய்யக்கூடிய பணிகள் நடைபெற்று வருகின்றன. மெரினா கடற்கரையையே சுத்தமாக வைத்துக்கொள்ளக் கூடிய அரசாகத்தான் தமிழக அரசு உள்ளது. மது பாட்டில்களைப் பார்த்தது மிகுந்த மனவேதனை அளிப்பதாக ஆளுநர், தன்னுடைய மன உளைச்சலை எல்லாம் அங்கே வெளிப்படுத்தி இருக்கிறார். அவருக்குத் தெரியும் சூதாட்டத்தையும் காந்தி தடுக்கத்தான் நினைத்தார். ஆனால் பல நூறு ஆட்டங்கள் இன்று இந்தியா முழுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
மதுவிலக்கு வேண்டும் என்பதுதான், எங்களது நிலை. அதற்கு ஆதரவான அரசுதான் எங்கள் அரசு. அதே நேரத்தில் மதுவை ஒழிக்க வேண்டும் என்று சொன்னால், எல்லா மாநிலமும் சேர்ந்தால் தான் மதுவை ஒழிக்க முடியும். தமிழ்நாடு மட்டும் மதுவை ஒழிக்க முடியாது. ஆனால் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்குப் பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கின்ற முதலமைச்சராகத் தமிழக முதலமைச்சர் இருப்பார். எங்களுக்குத் தமிழகத்தில் மது இருக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிது கூட கிடையாது. ஆனால் பக்கத்து மாநிலங்கள் அனைத்திலும் மது இருக்கிறது. எனவே இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாக மதுவிலக்கு ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தால் தான் மதுவை ஒழிக்க முடியும்” எனத் தெரிவித்தார்.