சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆக்ஸிஜன் சேமிப்பு மையத்தை ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவர்கள் ஏற்கனவே 6 ஆயிரம் கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் மையம் இயங்கி கொண்டு வருகிறது என்றும் கூடுதலாக திங்கட்கிழமை 6 ஆயிரம் கிலோ லிட்டர் கொண்ட ஆக்சிஜன் சேமிப்பு மையம் இயங்க உள்ளதாகவும் கூறினார்கள். இதனைத்தொடர்ந்து மருத்துவர்களிடம் கரோனா பாதிக்கப்பட்டு ஆக்ஸிஜன் படுக்கையுடன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குறித்தும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தற்போது இந்த மருத்துவமனையில் கூடுதலாக ரூ30 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள 6 ஆயிரம் கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்ஸிஜன் சேமிப்பு மையம் செயல்பட உள்ளது. அது செயல்பட்டால் 250 ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதி ஏற்படுத்தப்படும். அதேபோல் கடலூர் அரசு மருத்துவமனையிலும் 216 கூடுதல் படுக்கை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் ஆக்சிஜனுடன் கூடிய 600 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு பதவியேற்ற ஒரு வாரத்தில் இருந்தே கரோனாவை கட்டுபடுத்துவதற்கான தொடர்பணியை செய்து வருகிறது. அதனடிப்படையில் முதல்வர், அமைச்சர்களை தொகுதிக்கு சென்று கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட உத்தரவிட்டுள்ளார். கரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்ட ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் கூட்டு நடவடிக்கை குழு உருவாக்கப்பட்டுள்ளது . இந்த அரசு கரோனாவிருந்து அனைவரையும் காப்பாற்றும் பொதுமக்கள் பயம் கொள்ளவேண்டாம்” என தெரிவித்தார்.
இதேபோல் சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் கரோனா தொற்று நோயாளிகளை பாதுகாக்கும் வகையில் 400 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனையும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தொற்று ஏற்பட்டு பாதுகாப்பு மையத்திற்கு வரும் நோயாளிகளுக்கு என்னென்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளது என அங்குள்ள அலுவலர்களிடமும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். புதிய தொற்று ஏற்பட்டு வரும் நோயாளிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் எந்தவித இடையூறும் இல்லாமல் உடனடியாக செய்து தர வேண்டும் என அவர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் அருண்சத்யா, சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன், சிதம்பரம் வட்டாட்சியர் ஆனந்த், அண்ணாமலைப்பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசன், பதிவாளர் ஞானதேவன், மருத்துவகல்லூரி கண்காணிப்பாளர் நிர்மலா, சிதம்பரம் டிஎஸ்பி லாமேக் உள்ளிட்டவருவாய்த்துறையினர், காவல் துறையினர், மருத்துவர்கள் என உடனிருந்தனர்.