திண்டுக்கல் மாநகராட்சியில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக 30 வார்டுகளை கைப்பற்றியது. அதோடு கூட்டணி கட்சிகள் 7 வார்டுகளை கைப்பற்றின. அதேபோல், சுயேட்சையாக தேர்தலை சந்தித்து வெற்றி பெற்ற 5 பேர் திமுகவுக்கு ஆதரவு கொடுத்ததின் மூலம் ஆளும் கட்சியான திமுக 42 கவுன்சிலர்களுடன் பெரும்பான்மை பலத்துடன் இருக்கிறது. எதிர்க்கட்சியான அதிமுக 5 கவுன்சிலர்களையும், பா.ஜ.க. ஒரு கவுன்சிலரையும் வென்றுள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சி பெண் மேயருக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால், திமுக சார்பில் வெற்றி பெற்றிருக்கும் 18 பெண் கவுன்சிலர்களிடையே போட்டி நிலவிவருகிறது. இதில் கட்சிக்காக உழைத்தவர்களுக்குத்தான் மேயரையும், துணை மேயரையும் கொடுக்க வேண்டும். அதிலும் அனைத்து தரப்பினர் பாராட்டுக்கும் உரியவராகவும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் மேயர், துணை மேயர் தேர்வு செய்வதில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தீவிரம் காட்டி வருகிறார் என்ற பேச்சு பரவலாக எதிரொலித்து வருகிறது.
அதன் அடிப்படையில்தான் கடந்த 10 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்து மாநகரச் செயலாளரான ராஜாவுக்கு துணை மேயர் கொடுக்க அமைச்சர் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. அதுபோல் ஏற்கனவே பெண் மேயர் ரேஸ்சில் லட்சுமி, நித்தியா, இளமதி, இந்திராணி ஆகிய நான்கு பெண் கவுன்சிலர்கள் இறுதி பட்டியலில் இருப்பதாக தெரியவந்தது.
இதில் இந்திராணி, லட்சுமி, நித்தியா ஆகியோர் கட்சிக்காக உழைத்தவர்கள் அல்ல உறவினர்கள் மூலமாக சீட் வாங்கி கவுன்சிலராக வெற்றி பெற்று மேயர் சீட் வாங்க வேண்டும் என்று இருந்து வந்தனர் எனும் பேச்சும் எழுந்துவருகிறது. அதுபோல், 23வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இளமதி ஏற்கனவே கவுன்சிலராக இருந்து வந்தவர். கட்சிக்காக உழைத்து வருபவரே தவிர பணம் பலம் எல்லாம் இல்லை. தற்போது வெற்றி பெற்றும்கூட கட்சியில் பணி செய்யக் கூடியவராக தான் இருந்துவந்தாரே தவிர, மேயர் ரேஸ்சில் வரவும் இல்லை. ஆனால், அமைச்சர் ஐ. பெரியசாமி கட்சிக்காக உழைத்தவர் தான் பதவிகள் கொடுக்கப்படும் என்று ஏற்கனவே பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தார்.
அதைத் தொடர்ந்து மாநகரில் வெற்றிபெற்ற பெண் கவுன்சிலர்கள் அனைவரையும் ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டு, ஆய்வு செய்து கட்சிக்காக உழைத்து வருபவர்கள் யார்? யார்? என்பதையும் ஆய்வு செய்தார். அதில் சில கவுன்சிலர்களை மேயர் பதவிக்கு வர முடியாத சூழ்நிலையால் அவர்களை கொண்டுவர முடியவில்லை. அதைத் தொடர்ந்து பார்க்கும்போது பண வசதி இல்லாமலும், எளிமையாக கட்சி பணியாற்றி வரும் இளமதியை மேயர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரியவருகிறது. இப்படி அனைத்து தரப்பினரும் போற்றக் கூடிய நபராக பெண் மேயரை அமைச்சர் ஐ.பெரியசாமி தேர்வு செய்து சிம்மாசனத்தில் நாளை அமர வைப்பதின் மூலம் அமைச்சர் ஐ.பெரியசாமியின் இமேஜ் மக்கள் மத்தியிலும் கட்சிக்காரர்கள் மத்தியிலும் மேலும் உயரப்போகிறது என அக்கட்சியினர் பேசிக்கொள்கின்றனர்.