மன்மோகன் சிங்கினால் முடிந்தது மோடியால் ஏன் முடியவில்லை என கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 10 இடங்களில் காங்கிரஸ் கொடி கம்பங்கள் அமைக்கப்பட்டது. அதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கலந்து கொண்டு கொடிகளை ஏற்றி வைத்தார். இதன் பின் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “தெளிவான விஷயத்தை ராகுல் காந்தி நாட்டு மக்களுக்குச் சொல்லியுள்ளார். மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் கச்சா எண்ணெய் விலை 108 அமெரிக்க டாலர். ஆனால் பெட்ரோல் விலை 70 ரூபாய்தான். ஆனால், இன்றைக்கு கச்சா எண்ணெய் விலை 78 அமெரிக்க டாலர்தான். ஆனால் பெட்ரோல் விலை 100 ரூபாய். இதற்கு என்ன காரணம் எனக் கேள்வி கேட்டுள்ளார். இதுவரை மோடியிடம் இருந்து பதில் இல்லை.
400 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டரை மன்மோகன் சிங் வழங்கினார். இன்றைக்கு 1200 ரூபாய். இதற்கான காரணத்தைக் கேட்டால் நிர்மலா சீதாராமனுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. நாங்கள் மிக சிரமமான கேள்வியைக் கேட்கவில்லை. 10 வருடங்கள் முன்பு மன்மோகன் சிங்கினால் செய்ய முடிந்ததை இன்று ஏன் மோடியால் செய்ய முடியவில்லை என்பதுதான் கேள்வி?” எனக் கூறினார்.