வரும் மே 28ஆம் தேதி புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, ஆம் ஆத்மி,உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் திறப்புவிழாவை புறக்கணிக்கின்றன.
குடியரசுத் தலைவர் தான் நாடாளுமன்றக் கட்டடத்தை திறந்து வைக்க வேண்டும் என்ற மரபை மீறி பிரதமர் திறந்து வைக்க இருப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர் எதிர்க்கட்சியினர். புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவில் எதிர்க்கட்சிகள் கலந்துகொள்ள வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா தனது ட்விட்டரில், "குடியரசு தலைவருக்கு தான் முதல் இடம். குடியரசு துணை தலைவருக்கு 2ஆம் இடம். பிரதமருக்கு 3வது இடம். ஆனால் மத்திய அரசானது அரசியலமைப்பு சட்டத்தின் அருமைகள் குறித்து ஒன்றும் அறியாது. இது பிரதமர் மோடி தனது சொந்தப் பணத்தைக் கொண்டு கட்டியுள்ள அவரது வீட்டின் புதுமனை புகுவிழா அல்ல. திரிணாமுல் காங்கிரஸ் 28-ந் தேதி நடைபெற உள்ள விழாவில் பங்கேற்காது. பாஜகவுக்கு வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.