மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேயுள்ள நாட்டார்மங்கலம் கிராம ஊராட்சித் தலைவரான, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த, கணேஷ் என்பவரை துணைத் தலைவர் பிரதீப் என்பவர் கடத்திச் சென்றதாகக் கிராமத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்தனர்.
கிராம ஊராட்சி மன்றத் துணை தலைவரான பிரதீப் என்பவரின் சகோதரிக்கு ஊராட்சி செயலாளர் பதவிபெற வேண்டும் என்பதற்காக ஊராட்சித் தலைவரை கடத்திச் சென்றதாகவும், கடந்த 4 நாட்களாகக் காணாமல் போன நிலையில் உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில், புகார் மனு அளிக்கப்பட்ட நிலையில் தற்போது வரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கிராமத்தினர் குற்றம்சாட்டினர்.
நாட்டார்மங்கலம் ஊரட்சிமன்றத் தலைவர் தேர்தல், சட்ட ஒழுங்கு பிரச்சனை காரணமாக, கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை தேர்தல் நடத்தப்படாத நிலையில் பதற்றமான ஊராட்சியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர் கடத்தப்பட்டதாக எழுந்துள்ள புகார் சர்ச்சை எழுந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக மதுரை குன்னத்தூர் கிராம ஊராட்சித் தலைவர் கிருஷ்ணராஜ் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு இதுவரையில் கொலையாளிகளைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் மதுரையில் மேலும் ஒரு ஊராட்சித் தலைவர் காணாமல் போயிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டார்மங்கலம் ஊராட்சிமன்றத் தலைவர் கணேஷ் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நாட்டார்மங்கலம் ஊராட்சிமன்றத் தலைவர் கணேஷ் ஆட்சியர் அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். தம்மை யாரும் கடத்தவில்லை என்று நாட்டார்மங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் கணேசன் விளக்கம் அளித்துள்ளார்.