Skip to main content

கோபாலபுரத்தில் அழகிரி..! ஒரு நெகிழ்ச்சி சம்பவம்..! 

Published on 03/06/2021 | Edited on 03/06/2021

 

M K Azhagiri Visited gopalapuram kalaignar house


2021ஆம் ஆண்டு நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதில், திமுக மட்டும் 125 இடங்களில் வென்றது.  திமுக ஆட்சி ஏற்றுக்கொண்ட நேரம் தமிழ்நாட்டில் கரோனாவின் இரண்டாம் அலை பரவ ஆரம்பித்தது. இதனால், எளிமையாக ஆளுநர் மாளிகையில் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின், உட்பட மற்ற துறை அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்தப் பதவி ஏற்பு விழாவிற்கு முன்பாக மு.க. அழகிரி, தனது சகோதரர் மு.க.ஸ்டாலினுக்கு வெற்றி பெற்றதற்கான வாழ்த்தைத் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து திமுக சார்பில் அவருக்கு பதவி ஏற்பு விழாவிற்கு அழைப்பும் விடுக்கப்பட்டது. அதற்கு அவர், தற்போது கரோனா இரண்டாம் அலை பரவிவருவதால் நான் சென்னைக்கு வந்து பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள முடியாது. ஆனால், நிச்சயம் என் மகன் மற்றும் மகள் அந்த விழாவில் கலந்துக்கொள்வார்கள் எனத் தெரிவித்திருந்தார். அதேபோல், தயா அழகிரி அந்தப் பதவி ஏற்பு விழாவில் தனது சகோதரியுடன் கலந்துகொண்டார். 

 

இந்நிலையில் இன்று, திமுக முன்னாள் தலைவரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான கலைஞரின் பிறந்த நாளை அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். காலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மெரினாவில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடம், அண்ணா அறிவாலயம் ஆகிய பகுதிகளில் கலைஞருக்கு அஞ்சலி செலுத்தினார். பிறகு கோபாலபுரத்தில் உள்ள கலைஞரின் வீட்டில் அவரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து சிறிது நேரத்திற்கெல்லாம் அங்கு வந்த மு.க.அழகிரி கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதனைக் கண்ட திமுகவினர், மீண்டும் அழகிரி திமுகவில் இணைத்துக் கொள்ளப்படுவார் என பேசிக்கொண்டனர்.   

 

 

சார்ந்த செய்திகள்