தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் பாரதிய ஜனதாவுக்கு 20 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியுள்ளது. அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்த நிலையில், தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கடந்த 5ஆம் தேதி கையெழுத்தானது. முன்னதாக அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிமுக - பாஜக இடையே எந்தெந்த தொகுதிகளில் பாஜக போட்டியிடும் என்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. நேற்று (09.03.2021) விடிய விடிய நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு தொகுதிகள் முடிவு செய்யப்பட்டதாக பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் உடன் பாஜக சார்பில் நேற்று இரவு 9.20க்கு தொடங்கி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எல்.முருகன், கிசன் ரெட்டி, அண்ணாமலை ஆகியோர் பங்கேற்றனர். இரவு 11 மணிவரை பேச்சுவார்த்தை நடைபெற்று சுமுக தீர்வு எட்டப்பட்டது. அதனையடுத்து பாமக உடன் 12 மணிக்கு தொகுதிகள் குறித்த பேச்சுவார்த்தை தொடங்கி நள்ளிரவு 1 மணிக்கு மேல் நிறைவுற்றது. அதன்பின்னர் அதிமுக வேட்பாளர்கள் குறித்து ஓபிஎஸ், இபிஎஸ், கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், தங்கமணி, வேலுமணி ஆகியோர் அதிகாலை 4 மணிவரை ஆலோசனை நடத்தினர்.