அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் மாநாடு பெங்களூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காணொளி வாயிலாகப் பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைக் கடுமையாகச் சாடினார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, “பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் ஆகிய இரண்டுமே ஆட்சி அதிகாரத்தில் மட்டுமே ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்கள் மணிப்பூரை எரிப்பார்கள். ஏன் முழு நாட்டையும் எரிப்பார்கள். ஹரியானா, பஞ்சாப் அல்லது உத்திரப்பிரதேசமாக இருந்தாலும் அவர்கள் ஆட்சி அதிகாரத்தை மட்டுமே விரும்புவதால் அவர்கள் முழு நாட்டையும் கூட விற்று விடுவார்கள்.
நாட்டின் மீது அன்பு கொண்டு, நாட்டு மக்கள் துயரப்படும் போது அவர்களும் வருந்துவார்கள். ஆனால், அவர்கள் மனதில் உண்மையில் அப்படியொரு வலி, கவலை, அன்பு இல்லை. நாட்டின் துயரம் மற்றும் வலியைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் அவர்களைப் பிளவுபடுத்துவதையே ஒரே நோக்கமாகக் கொண்டு பா.ஜ.க.வும் ஆர்.எஸ்.எஸும் செயல்பட்டு வருகிறது. பிரதமர் நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு மட்டுமே சேவை செய்கிறார். அதனால், மணிப்பூரைப் பற்றி அவர் கவலைப்படாமல் இருக்கிறார்” என்று பேசினார்.
அதேபோல், மேற்கு வங்க சட்டப்பேரவையில் பேசிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, “சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற மேற்கு வங்க மாநில பா.ஜ.க தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில், மக்களவைத் தேர்தலுக்கு முன் மக்களிடையே மதம், சாதி, வகுப்பு அடிப்படையில் பிரிவினையை உண்டாக்க பா.ஜ.க.வினர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. மேற்கு வங்கத்தில் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மகளிர்க்கு எதிரான அத்துமீறல் ஆகியவற்றை எடுத்துக்கூறி மாநில அரசுக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்த பா.ஜ.க முயற்சித்து வருகிறது. மேலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வாக்குகளைப் பிரிக்கும் எந்தக் கட்சியாக இருந்தாலும் அந்தக் கட்சிக்கு நிதியுதவி செய்யவும் அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.