பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் இன்று (22.11.2018) காலை தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி,
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கஜா புயலால் கடும் சேதம் அடைந்துள்ளது. அதற்கு தேவையான நிதியை பெறுவதற்காக பிரதமரை இன்று காலை சந்தித்தோம். புயலால் ஏற்பட்ட சேத விவரங்களை தெரிவித்தோம்.
தற்காலிக சீரமைப்புக்காக உடனடியாக 1500 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன். நிரந்தர சீரமைப்பு பணிகளுக்காக 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன். கஜா புயலால் சேதமடைந்த பகுதிகளை உடனடியாக மத்திய குழு பார்வையிட்டு, சேத விவரங்களை கணக்கிட்டு நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளேன்.
பிரதமர் உடனடியாக மத்திய குழுவை அனுப்பி வைத்து சேத பகுதிகளை பார்வையிட செய்வதாக கூறினார். விரைவில் மத்திய குழு புயலால் சேதமடைந்த பகுதிகளை பார்வையிடுவதற்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளார்.
பொதுவாக புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய அமைச்சர்கள் வந்து பார்வையிடுவார்கள். அண்மையில் கேரளாவில் வெள்ளப் பாதிப்புகளை மத்திய அமைச்சர்கள் பார்வையிட்டார்கள். ஆனால் தமிழகத்திற்கு யாரும வரவில்லையே?
எங்களைப் பொறுத்தவரையில் கஜா புயல் வருவதற்கு முன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையை நாங்கள் எடுத்தோம். கிட்டதட்ட 82 ஆயிரம் பேரை முகாம்களில் தங்க வைத்து பாதுகாத்தன் விளைவாக பொதுமக்களின் பாதிப்பு குறைக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் அந்தந்த மாவட்ட அமைச்சர்களை அங்கேயே தங்கி புயல் வருதற்கு முன்பே உரிய நடவடிக்கை எடுக்க ஆலோசனை வழங்கப்பட்டது. கஜா புயல் வருவது குறித்து தலைமைச் செயலகத்தில் இரண்டு முறை என் தலைமையில் துணை முதல் அமைச்சர் மற்றும் மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், மூத்த ஆட்சிப் பணியாளர்களுடன் ஆலோசனை நடைப்பெற்றது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களிடம் ஆலோசனை வழங்கப்பட்டது. மூத்த ஆட்சிப் பணியாளர்களை முன்கூட்டியே அந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசை பொறுத்தவரைக்கும் கஜா புயலால் மக்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் காரணமாகத்தான் பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளது.
இதில் மத்திய அரசின் ரோல் என்ன?
அதாவது எங்களுடைய பணிகளைப் பற்றி நான் குறிப்பிடுகிறேன். மத்திய அரசு பணிகளை நீங்க அவர்களிடம்தான் கேட்க வேண்டும்.
கஜா புயல் பாதிப்பு ஏற்பட்டவுடனேயே அதிகாரிகளை அந்தெந்த பகுதிகளுக்கு அனுப்பி வைத்து, சேத மதிப்பீடுகளை கணக்கிட்டு அதனை தற்போது பிரதமரிடம் அளித்துள்ளோம். தமிழ்நாடு அரசு என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்கிறது. அதனால்தான் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.
பிரதமர் தமிழகம் வருவதாக கூறினாரா?
அதுபற்றி எந்த உறுதியும் அளிக்கவில்லை. முதல் கட்டமாக மத்திய குழுவை அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கூறினார்.